தமிழகத்தில் இன்று முதல் அனைத்து ரேசன் கடைகளிலும் பொங்கல் பரிசு மற்றும் ரூபாய் 1000 சிறப்பு தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதால் அங்கும் இன்று முதல் பொங்கல் தொகை மற்றும் பரிசு வழங்கப்பட உள்ளது.
பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 5ம் தேதி தலைமை செயலகத்தில் வைத்து தொடங்கி வைத்தார். ரூ.258 கோடி ரூபாயில் 2.02 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த பரிசுத்தொகுப்பு வழங்கப்படுகிறது. இதில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, இரண்டு துண்டு கரும்புத்துண்டு மற்றும் பொங்கல் வைப்பதற்கு தேவையான முந்திரி, ஏலக்காய் உள்ளிட்டவை இருக்கும். இத்துடன் ஏழை மக்களின் நலன் கருதி ரூ.1000 தொகையாகவும் வழங்கப்படுகிறது.
பொங்கல் பரிசு முக்கிய விவரங்கள்
இன்று முதல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நியாய விலைக்கடைகளிலும் பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பு வழங்கப்படவுள்ளது. 2019ம் ஆண்டின் பொங்கல் பண்டிகை பரிசு வழங்குவது குறித்து நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டியது என்னென்ன?
Read More: 1000 ரூபாயுடன் கிடைக்கும் பொங்கல் பரிசுப் பொருட்கள் இவைதான்: எடை அளவும் அறிவிப்பு
2019 பொங்கல் பரிசு தொகுப்பு அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் விநியோகம் செய்வது குறித்து கீழ்க்கண்ட அறிவுரைகளை அரசு வழங்கி உள்ளது.
- 07.1.2019 முதல் 12.1.2019 வரை அனைத்து கடைகளிலும் அதற்குரிய வேலை நாட்களில் வழங்கப்பட்டு, விடுபட்டவர்களுக்கு 13.1.2019 , 14.1.2019 தேதிகளில் அளிக்கப்படும்.
- அனைத்து முழு/ப.நேர கடைகளிலும் உரிய வேலை நாட்களில் வழங்கப்படும்.
பொங்கல் பரிசு தொகுப்பாக 1கிலோ பச்சரிசி,1கிலோ சர்க்கரை,20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய், ஆகியவற்றைக் காகித உறைகளில் போட்டும், அத்துடன் ரூ 1000/- (500+500 =1000 என இரண்டு நோட்டு கையில் கவர் போடாமல் 2 அடி கரும்புடன்) ஆகியவற்றை அதற்கானத் துணிப்பையில் போட்டு தரப்படும்.
- பொங்கல் பரிசு தொகுப்பு POS மூலம் பில் போட்டு வழங்குவார்கள். குடும்ப அட்டைதாரின் ஒப்பம் பெற்று பணம் கொடுக்கப்படும்.
- கூட்ட நெரிசலைத் தவிர்க்க 400 குடும்ப அட்டைகளுக்கும் மேல் உள்ள கடைகளில் ஒரு நாளைக்கு குறிப்பிட்ட எண்ணைக்கை என பிரித்து சுழற்சி முறையில் வழங்கிடுவார்கள்.
- குடும்ப அட்டை,ஆதார் அட்டை(QR CODE மூலம்),பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்(OTP)ஆகியவற்றை நிச்சயம் பெற்ற பிறகே பரிசு கொடுப்பார்கள். எனவே தகுந்த ஆவணம் மற்றும் விவரங்களை எடுத்துச் செல்லுங்கள்.
- gift bag வர வில்லை என்றால் நீங்கள் எடுத்துச்செல்லும் பையில் கொடுப்பார்கள். எனவே கையில் ஒரு பை எடுத்துச்செல்ல மறக்க வேண்டாம்.
- குடும்பத் தலைவர் தான் வாங்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. குடும்பத்தில் உள்ளவர்கள் யார் சென்றாலும் கொடுக்கப்படும். ஆனால் நிச்சயம் குடும்பத்தில் உள்ள ஒருவர் தான் செல்ல வேண்டும்.
- ஒரு நபருக்கு ஒரு குடும்ப அட்டைக்கான பரிசுத்தொகுப்பிற்கு மேல் வழங்கப்படாது.