தமிழக அரசு திருநெல்வேலி, பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 6 ஐபிஎஸ் அதிகாரிகளை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.
தமிழக உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி வெளியிட்டுள்ள உத்தரவில், காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஐ.ஜி தீபக் எம்.தாமோர் ஐபிஎஸ் அதிகாரி மீண்டும் பணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். அவர் திருநெல்வேலி மாநகர ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி மாநகர காவல் ஆணையராக இருந்த என்.பாஸ்கரன் சென்னையில் காவல் துறை இயக்கத்தில் காலியாக இருந்த ஐ.ஜி பதவிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் துணை ஐ.ஜி-யாக இருந்த
எம்.ரங்கராஜன் சென்னை குற்றப்பிரிவு சிஐடி - III பிரிவுக்கு காவல் கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை குற்றப்பிரிவு சிஐடி - III பிரிவுக்கு காவல் கண்காணிப்பாளராக இருந்த நிஷா பார்த்திபன் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த திஷா மிட்டல் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த கயல்விழி உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி எக்ஸ் பட்டாலியனில் காலியாக உள்ள கம்மாண்டன்ட் பதவிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.