தமிழகத்தில் நடத்தப்படும் அனைத்து ஆன்லைன் வகுப்புகளும் இனிமேல் அந்தந்த பள்ளி நிர்வாகங்களால் பதிவு செய்யப்பட்டு அவ்வப்போது மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் ஆன்லைன் வகுப்பில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக எழுந்த புகாரின் பேரில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து, தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகளை நடத்துவதற்கான பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கான வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுவது பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகத்தினரால் கண்கானிக்கப்பட்டு பதிவு செய்யப்பட வேண்டும் என்றும், பதிவு செய்யப்பட்ட காட்சிகளை பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர்-ஆசிரியர் சங்கம் என இருவரும் அவ்வப்போது மதிப்பாய்வு செய்ய வேண்டும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் பள்ளிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்குகளைத் தவிர்ப்பதற்காக ஒரு நிலையான இயக்க நடைமுறையை கொண்டுவர ஒரு குழுவை அமைப்பதற்கான வழிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் பள்ளி கல்வி ஆணையர், கல்லூரிக் கல்வி இயக்குநர், நிபுணர்கள், உளவியலாளர்கள், கல்வியாளர்கள், சைபர் கிரைம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து நிபுணத்துவம் பெற்ற காவல்துறை அதிகாரிகள் குழுவில் ஒரு பகுதியாக இருப்பார்கள். இந்த குழு ஒரு வாரத்திற்குள் அறிக்கையை சமர்ப்பிக்கும்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பாலியல் தொல்லை குறித்து புகார் அளிக்க மாணவர்களுக்கு ஹெல்ப்லைன் எண் அமைக்க வழி செய்யப்படும் என்றும், இதுபோன்ற குற்றங்களுக்காக பதிவுசெய்யப்பட்ட வழக்குகளில் குற்றம் சாட்டப்ட்டவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற புகார்களில், மாணவர்களுக்கு இடையூறு செய்யாமல் புகார்களை உடனடியாக விசாரிப்பதை உறுதி செய்யுமாறு சைபர் கிரைம் களத்தில் உள்ள போலீஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil