சிறை கைதிகள் தங்கள் குடும்பத்துடன் வீடியோ காலிங் பேசுவதற்கான நேரத்தை மாதத்திற்கு 120 நிமிடங்களாக அதிகரிக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் சிறை கைதிகள் தங்கள் குடும்பத்திற்கு குரல் அழைப்புகள் மூலம் பேசுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா தொற்று காலக்கட்டத்தின்போது கைதிகள் குடும்பத்தினருடன் வீடியோ காலிங் மூலம் தொடர்பு கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாநிலத்தில் இயல்பு நிலை திரும்பிய பிறகு, வீடியோ அழைப்பு வசதி நிறுத்தப்பட்டது.
இதனிடையே, சிறைகள் மற்றும் சீர்திருத்த சேவைகளின் இயக்குநர் ஜெனரல், கடந்த அக்டோபர் மாதம் அரசாங்கத்திற்கு எழுதிய கடிதத்தில்,, கொரோனா தொற்று காலக்கட்டத்தில், தங்களுக்கு வழங்கப்பட்ட வீடியோ அழைப்பு வசதிகளை மீண்டும் கொண்டுவருமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர். கைதிகளுக்கு வீடியோ அழைப்பு வசதியை வழங்குவது அவர்களின் குடும்ப உறுப்பினர்களுடனான தொடர்புகளை மேம்படுத்தும்.
இதன் மூலம் மன ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும். அதேபோல் "வீடியோ அழைப்புகள் மூலம் சிறைச்சாலை பாதுகாப்பை மேம்படுத்தலாம், கைதிகளை பார்க்க அவர்களின் குடும்பத்தினர் நேரில் வரும் தேவையை குறைக்கும். இதன் மூலம் சிறைச்சாலைகளுக்குள் தடைசெய்யப்பட்ட பொருட்கள் வருவதை தடுக்க முடியும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இயக்குநர் ஜெனரல் இந்த கடிதத்தை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு, பொதுத்துறை நிறுவனங்கள்/அமைப்புகளின் உதவியுடன் சிறைகளில் குரல் மற்றும் வீடியோ அழைப்பு வசதியுடன் கூடிய தொலைபேசி சாவடிகளை அமைக்க சிறைத்துறைக்கு அனுமதி அளித்துள்ளது. ஏற்கனவே தொலைபேசி வசதி உள்ள கைதிகளுக்கு வழங்கப்படும் கால் எண்ணிக்கையை 3 நாட்களுக்கு ஒருமுறை என்ற அடிப்படையில் மாதத்திற்கு 8-ல் இருந்து 10 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல் அதிகபட்ச காலிங் நேரத்தை 56 நிமிடங்களில் இருந்து 120 நிமிடங்களாகவும் (12 நிமிடங்கள்/அழைப்பு காலம்) அதிகரிக்கவும் அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. அனைத்து மத்திய சிறைகளிலும், பெண்களுக்கான சிறப்பு சிறைகளிலும், புதுக்கோட்டையில் உள்ள போர்ஸ்டல் பள்ளியிலும் வழங்கப்பட்டுள்ளது என உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை பட்ஜெட் விவாதத்தின் போது சட்ட அமைச்சர் எஸ்.ரெகுபதி வெளியிட்டார்.
மேலும் பொதுத்துறை நிறுவனங்களான பி.எஸ்.என்.எல் (BSNL),ரயில்டெல் (RailTel) மற்றும் கெல்ட்ரான் (KELTRON) ஆகியவை ஏற்கனவே செப்டம்பரில் தங்கள் தயாரிப்புகள் குறித்து சிறைத்துறைக்கு விளக்கமளித்தன. திணைக்களத்தால் வாங்கப்பட்ட 58 ஆண்ட்ராய்டு மொபைல் போன்களின் ஆதரவுடன், கொரோனா தொற்று சமயத்தில் கைதிகளுக்கு காலிங் வசதி ஏற்படுத்தி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“