குடியரசு தின விழாவை முன்னிட்டு, ஆளுநர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தை தமிழ்நாடு அரசு புறக்கணிப்பதாக கூறியுள்ளது.
சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகிய நாட்களின் போது ராஜ் பவனில் ஆளுநர் சார்பில் தேநீர் விருந்து அளிக்கப்படுவது வழக்கமாகும். இந்த விருந்தில் முதலமைச்சர், அமைச்சர்கள், ஆளுங்கட்சி உறுப்பினர்கள், எதிர்க்கட்சியினர் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும். அதனடிப்படையில், நாளை (ஜன 26) குடியரசு தின விழாவை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என். ரவி சார்பில் விருந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
ஆளுநர் ஆர்.என். ரவி மீது உள்ள அதிருப்தியின் காரணமாக இந்த ஆண்டு நடைபெறும் விருந்தில் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், ம.தி.மு.க உள்ளிட்டோர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு சார்பிலும் ஆளுநர் விருந்தில் யாரும் பங்கேற்கவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள் யாரும் இதில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு குடியரசு தின விழா தேநீர் விருந்தில் முதலமைச்சர் பங்கேற்காத நிலையில், அமைச்சர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.