சுதந்திர இந்தியாவின் சுயராஜ்ஜியத்தை உணர வேண்டுமென்றால் காலனிய அடிமை மனநிலையில் இருந்து விடுபட வேண்டும் என ஆளுனர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார்.
46-வது இந்தியச் சமூக அறிவியல் மாநாடு திருச்சி திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இன்று தொடங்கியது. 5 நாள் நடைபெறும் இந்த மாநாட்டைச் சென்னையிலிருந்து காணொளி மூலமாகத் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில்,ஈ
காலணி ஆதிக்கத்திற்கு முன்னரே இந்தியாவின் கலாச்சார பண்பாடு மிகவும் உயர்ந்த நிலையில் இருந்ததை நாம் அனைவரும் அறிவோம். பிரிட்டிஷ் காலனியம் இந்தியாவின் அரசியல் சமூக, பொருளாதார பண்புகளை அவர்களது தேவைகளுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்து கல்வி முறை, பொருளாதாரம் மற்றும் இதர தளங்களில் தலையீடு செய்தது. அதனை தற்போது மீட்டெடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். அதற்கான ஆதாரங்களை ஆவணக் காப்பகங்களில் நாம் காணலாம்.

பூரண சுயராஜ்ஜியம் என்பதன் பொருளை முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டும். சுதந்திர இந்தியாவின் சுயராஜ்ஜியத்தை உணர வேண்டுமென்றால் காலனிய அடிமை மனநிலையிலிருந்து விடுபட வேண்டும். இந்த மாநாட்டின் வெளியீடுகள், இந்தியாவின் வளர்ச்சிக்கும், சமூக மாற்றத்திற்கும் ஆசிரியர்கள், மாணவர்கள், ஆய்வாளர்கள் அனைவரும் அவரவர் துறையில் வினை ஊக்கிகளாக இணைத்துக் கொண்டு செயல்பட வேண்டும் என்று ஆளுனர் ரவி பேசினார்.
இந்த மாநாட்டில் சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவின் நிலை, சுதந்திரத்திற்குப் பின்னர் இதுவரை நாட்டில் இருக்கும் சுயச் சார்பு நிலைகள், இனிமேல் சுயச்சார்பு நிலையை வளர்த்தெடுப்பதற்கான திட்டங்கள் ஆகியவற்றினை கருப்பொருளாக வைத்து வாழ்க்கைத் தரத்தை மதிப்பீடு செய்தல், சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம், மற்றும் பாகுபாடு, வன்முறை, அச்சம் இல்லாத மாண்புடனான வாழ்க்கை, இந்திய மக்கள் அனைவரும் அமைதி மற்றும் சமூக நல்லிணக்கத்துடன் வாழ்வதற்கு உண்டான விவாதங்களை மைய கருப்பொருளாகக் கொண்டு இம்மாநாடு நடைபெற்று வருகிறது.
இதில் கல்வியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள், ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பிக்கின்றனர். 75-வது ஆண்டு இந்திய சுயராஜ்ஜியத்தின் மீதான அறிவியல் பூர்வமான எதிர்கால திட்டங்களை மையமாக வைத்து விவாதங்களும் நடக்கின்றன. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணை வேந்தர் மா.செல்வம், பதிவாளர் கணேசன், ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக பேராசிரியர் கம்பத்தோர் முரளிதர், கேரள மாநிலம் முன்னாள் தலைமைச் செயலாளர் விஜய் ஆனந்த், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளரான தங்க ஜெயராமன், ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் சந்துரு உட்படப் பலர் கலந்து கொண்டு தங்களது கருத்துரைகளை வழங்கி பேசுகின்றனர்.
இக்கருத்தரங்குகள் வழங்கப்படும் ஒவ்வொரு கருத்துக்களையும் தொகுத்து பல்வேறு துறைகளில் முன்னேற்றங்களைக் குறித்து அறிக்கையை அந்தந்த துறைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் மூலம் வழங்கப்பட உள்ளது. பல்வேறு மாநிலங்களிலிருந்து 450-க்கும் மேற்பட்ட சமூக அறிவியல் நிபுணர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டினை அலகாபாத் இந்தியச் சமூக அறிவியல் அகாடமி இணைந்து நடத்துகிறது.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/