தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரையாற்றியபோது நடந்த நிகழ்வுகள் குறித்து, தமிழக சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி, திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, எம்.பி.க்கள் ஆ.ராசா, வில்சன், என்.ஆர்.இளங்கோ ஆகியோர் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை வியாழக்கிழமை (ஜன; 12) சந்தித்து, முதல்வர் மு.க.ஸ்டாலினின் புகார் கடிதத்தை வழங்கினர்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் ஸ்டாலின் கூறியிருப்பதாவது:
”கடந்த ஜனவரி 9 ஆம் தேதி, ஆளுநர் உரையுடன் பேரவைக் கூட்டத் தொடர் துவங்கியது. இந்த உரைக்கான வரைவினை தமிழ்நாடு அரசு, ஆளுநருக்கு முன்னதாகவே அனுப்பி ஒப்புதல் வாங்கியது. இதனடிப்படையில், இந்த உரையினை அச்சிட்டு சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சட்டமன்றத்தில் ஆளுநர் தனது உரையில் பல பகுதிகளைப் படிக்காமலும், உரையில் குறிப்பிடப்படாத பல புதிய கருத்துகளை இணைத்தும் உரையாற்றினார். இது தமிழக சட்டமன்ற வரலாற்றின் மரபுகளை மீறிய செயல்.
ஒரு மாநிலத்தில் ஆளுநர் பதவி என்பது மிகவும் உயர்வான ஒன்று, அதே சமயம், ஆளுநர் என்பவர் அரசியல் கருத்துகளுக்கு, வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும். ஆனால், ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசுடன் ஒரு கருத்தியல் அரசியல் மோதல் போக்கைக் கடைபிடித்து வருகிறார். இது நமது அரசியலமைப்பு சட்டத்திற்கு முழுவதும் மாறானதாக உள்ளது.
இம்மாநிலத்தில் பின்பற்றப்படும் திராவிட கொள்கை, சமத்துவம், சமூகநீதி, பகுத்தறிவு மற்றும் சுயமரியாதை ஆகியவை மக்களின் மனங்களில் இருப்பது அவருக்கு ஏற்கவியலாத ஒன்றாக உள்ளது. அதன் ஒரு பகுதியாகவே சட்டமன்றத்தின் தொடக்க நாளில் அவர் நடந்து கொண்ட விதம் காணப்படுகிறது.
ஆளுநர் உரை என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், அரசியல் சட்டப் பிரிவு 163 (1)ன் படி ஆளுநர் என்பவர் அமைச்சரவையின் வழிகாட்டுதல் மற்றும் அறிவுரையின்படி நடக்க வேண்டும்.
எல்லா மாநிலங்களிலும் ஆளுநர் உரை என்பது அந்தந்த மாநில அரசுகள் சட்டமன்றத்தில் தயாரித்துக் கொடுத்ததாகத்தான் எப்போதும் இருந்து வருகிறது. ஆளுநர் தன்னுடைய தனிப்பட்ட அரசியல் கருத்துகளுக்கேற்ப அந்த உரையிலுள்ள கருத்துக்களை மாற்றவோ, புதிய கருத்துக்களை சேர்க்கவோ கூடாது. ஆனால், ஆளுநர் , அரசியல் சட்ட விதிகளையும், மரபுகளையும் மீறி அரசால் தயாரிக்கப்பட்டு அவரால் ஒப்புதல் அளிக்கப்பட்ட உரையின் பல பகுதிகளை வாசிக்காமல் தவிர்த்தார்.
அனைவரும் அறிந்த தலைவர்களின் பெயர்களை குறிப்பிடுவதையும் அவர் தவிர்த்தார்.
மாநிலத்தின் மிக முக்கிய, அரசியமைப்பின் உயரிய பொறுப்பிலுள்ள ஒருவர் இவ்வாறு நடந்துகொள்வதும், மாநில சமூக கட்டமைப்புகளை சிதைப்பதும் மிகவும் வேதனையளிக்கும் ஒன்றாகும்.
இதன் காரணமாகத்தான் முறையற்ற வகையில் ஆளுநர் வாசித்த உரையை, ஏற்கெனவே அவரால் ஒப்புதல் அளித்து சட்டமன்றத்திற்கு வழங்கப்பட்டதை மாற்றாமல் ஏற்கப்பட வேண்டுமென்ற தீர்மானத்தை கொண்டு வரவேண்டிய நிலை ஏற்பட்டது.
மேலும், முக்கியமான அரசு மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல், அவற்றுக்கு ஆளுநர் முட்டுக்கட்டை போடுவது, தமிழக அரசின் செயல்பாட்டு வேகத்தைக் குறைக்கிறது.
தமிழ்நாடு என்பது எல்லா மாநிலத்தவரையும், எல்லா நாட்டினைரையும் அன்போடு வரவேற்று உபசரிக்கும் பண்புக்குப் பெயர் பெற்றது. இங்கு பல்வேறு மத, மொழி மற்றும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் ஒற்றுமையோடு பன்னெடுங்காலமாக வாழ்ந்து வருகின்றனர். ஆனால், இந்தக் கொள்கைகளுக்கு எதிரான தன்னுடைய கருத்துக்களைப் பொதுவெளியில் பேசி மாநிலத்தில் அமைதியின்மை ஏற்படக்கூடிய ஒரு சூழலை ஆளுநர் ஏற்படுத்தி வருகிறார்.
எனவே, குடியரசுத் தலைவர் இதில் தலையிட்டு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இந்திய அரசியல் சாசனத்தில் குறிப்பிட்டுள்ளபடி அமைச்சரவையின் வழிகாட்டுதல் மற்றும் அறிவுரைகளின்படி நடப்பதை உறுதி செய்யவும், அதன் மூலம் மக்களுக்கு மாநில அரசு சிறந்ததொரு நிர்வாகத்தை வழங்க வழிவகை செய்யவும் அவருக்கு அறிவுரை வழங்க வேண்டும். குடியரசுத் தலைவர் எடுக்கும் முயற்சி இதில் நல்லதொரு பலனைத் தருமென நான் உறுதியாக நம்புகிறேன்” என்று முதல்வர் ஸ்டாலின் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“