சென்னை கிண்டியில் உள்ள உயர் சிறப்பு அரசு மருத்துவமனையில், புற்றுநோய் மருத்துவர் பாலாஜி என்பவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்த சம்பவத்திற்கு தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் கலைஞர் அரசு மருத்துவமனையில், புற்றுநோய் துறையில் பாலாஜி ஜெகன்நாதன் என்பவர் மருத்துவராக வேலை பார்த்து வருகிறார். மருத்துவர் பாலாஜி ஜெகன்நாதன், வழக்கம் போல் மருத்துவமனைக்கு பணிக்கு சென்றுள்ளார். அப்போது, தாயாருக்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என விக்னேஷ் என்பவர் பாலாஜியின் கழுத்து காதின் பின்புறம், நெற்றி, முதுகு உள்ளிட்ட 7 இடங்களில் கத்தியால் குத்தியுள்ளார்.
இந்த சம்பவத்தினால் படுகாயமடைந்த மருத்துவர் பாலாஜியை மீட்ட சக மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்த நிலையில், அவர் இதய நோயாளி என்பதால், 8 மணி நேரத்திற்கு பிறகு அவரின் நிலை குறித்து தெரிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இதனிடையே, மருத்துவர் பாலாஜியை தாக்கிய விக்னேஷை அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் வளைத்துப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதனைத் தொடர்ந்து விக்னேஷ் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக, தாக்குதல் சம்பவம் நடைபெற்ற இடத்தை பார்வையிட்ட சென்னை கமிஷனர் அருண் கூறியுள்ள நிலையில், மருத்துவர் பாலாஜி மீது கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டு இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். அரசு மருத்துவருக்கு நடந்த இந்த சம்பவம் குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘டாக்டர். பாலாஜி ஜெகநாதன் மீதான தாக்குதல் அதிர்ச்சியளிப்பதுடன் வன்மையாக கண்டிக்கத்தக்கது. மருத்துவர்களுக்கு எதிரான எந்தவொரு வன்முறையும் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறையினரின் பாதுகாப்பை, குறிப்பாக மருத்துவமனைகளில் உறுதிப்படுத்த அவசர மற்றும் உடனடி நடவடிக்கைகள் அவசியம். மருத்துவர் பாலாஜி விரைவாக உடல்நலம் பெற வேண்டிக் கொள்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“