தமிழ்நாடு ஆளுனர் ஆர்.என்.ரவி அவ்வப்போது கூறி வரும் கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், நேற்று மதச்சார்பின்மை என்பது இந்தியாவுக்குச் சொந்தமில்லாத ஐரோப்பியக் கருத்து என்று அவர் கூறிய கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கன்னியாகுமரி திருவட்டாரில் நடைபெற்ற இந்து தர்ம வித்யா பீடத்தின் பட்டமளிப்பு விழாவில் பேசிய பங்கேற்ற ஆளுனர் ஆர்.என்.ரவி, “இந்த நாட்டு மக்களுக்கு நிறைய மோசடிகள் நடந்துள்ளன, அதில் ஒன்று மதச்சார்பின்மைக்கு தவறான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. மதச்சார்பின்மை என்றால் என்ன? அதாவது மதச்சார்பின்மை என்பது ஒரு ஐரோப்பிய கருத்து. இந்தியாவில் மதச்சார்பின்மை தேவையில்லை என்பதால் அது அங்கேயே இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
"ஐரோப்பாவில், சர்ச்சுக்கும் ராஜாவுக்கும் சண்டை நடந்ததால், மதச்சார்பின்மை வந்தது. ஆனால் இந்தியா "தர்மத்திலிருந்து" எப்படி விலகி இருக்கும்? மதச்சார்பின்மை என்பது ஐரோப்பிய கருத்து, அது இருக்கட்டும். இந்தியாவில், மதச்சார்பின்மை தேவையில்லை, " என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியதாக ஏஎன்ஐ செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த கருத்து தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தி.மு.க மற்றும் இடதுசாரி காட்சிகள் ஆளுனர் ஆர்.என்.ரவிக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், ஆளுநரின் கருத்துக்கு ஆளும் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) சார்பில், செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதில், “மதச்சார்பின்மை என்பது இந்தியாவில் மிகவும் தேவையான கருத்து, ஐரோப்பாவில் அல்ல. குறிப்பாக ஆளுநர், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் செல்லவில்லை. மத சுதந்திரம் இருக்க வேண்டும் என்று பிரிவு 25 கூறுகிறது என்று அவருக்கு தெரியாதா? அவர் அரசியலமைப்பை முழுமையாக படிக்க வேண்டும்.
நமது அரசியலமைப்புச் சட்டத்தில் இருபத்தி இரண்டு மொழிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்தி என்பது ஒரு சில மாநிலங்கள் பேசும் மொழி. மீதமுள்ள மாநிலங்கள் பிற மொழிகளைப் பேசுகின்றன.. பா.ஜ.க.வின் பிரச்சனை என்னவென்றால், அவர்களுக்கு இந்தியாவும் தெரியாது, அரசியலமைப்புச் சட்டமும் தெரியாது. அவர்களுக்கு எதுவும் தெரியாது. அதனால்தான். அவர்களால் தனித்து ஆட்சி அமைக்க கூட முடியவில்லை” என்று கூறியுள்ளார்.
இது குறித்து சிபிஐ தலைவர் டி.ராஜாவும் ஆளுனர் ஆர்.என்.ரவியை கடுமையாக விமர்சித்துள்ளார். இதில் "ஆர்.என்.ரவியின் அறிக்கையை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அவருக்கு மதச்சார்பின்மை பற்றி என்ன தெரியும்? அவருக்கு இந்தியாவைப் பற்றி என்ன தெரியும்? அவர் ஒரு கவர்னர். அவர் அரசியல் சட்டத்திற்கு கட்டுப்பட வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்தியாவை மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசு என்று வரையறுக்கிறது.
"டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர், இறையியலை நிராகரித்தார். இந்து ராஷ்டிரம் உண்மையாக மாறினால், அது தேசத்திற்குப் பேராபத்தாக அமையும். மதச்சார்பின்மை என்பது மதத்தையும் அரசியலையும் தனித்தனியாக வைத்திருப்பது. வேண்டாம் என்று சொல்லும் அளவிற்கு அம்பேத்கர் சென்றார். தேர்தல் நோக்கத்திற்காக கடவுள்களை கொண்டு வரவில்லை," என்று தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.