அன்னை என்பது ஆக்க சக்தி. நாம் எங்கு இருந்தாலும் தாயை கைவிடக்கூடாது என அன்னையர் தின விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
சென்னை ஆளுநர் மாளிகையில் அன்னையர் தின நிகழ்ச்சி இன்று காலையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளில் சாதித்த சாதனையாளர்களின் தாயார்களை அழைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமைப்படுத்தினார். ஒவ்வொருவருக்கும் பொன்னாடை அணிவித்து கேடயம் வழங்கி கவுரவித்தார்.
இதையும் படியுங்கள்: 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே பணி: திரும்பி வந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்
நிகழ்ச்சியில் ஆர்.என்.ரவி தனது மனைவி லட்சுமியுடன் தாய்மார்களை கவுரவித்தார். செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞ்ஞானந்தாவின் தாயார் நாகலெட்சுமி, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் தாயார் நாகமணி உள்ளிட்ட 8 பேருக்கு விருதினை வழங்கி அவர்கள் சிறப்பித்தனர். பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றும்போது ஆளுநர் ஆர்.என்.ரவி, ’அம்மா என்றழைக்காத உயிரில்லையே, அம்மாவை வணங்காது உயர்வில்லையே’ என்ற பாடலை பாடினார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையில், அன்னை என்பது ஆக்க சக்தி. குழந்தைகள் மற்றும் குடும்பத்தின் வளர்ச்சிக்காக உழைப்பதை அன்னையர்கள் மகிழ்ச்சியாகவே கருதுகின்றனர். நாம் எங்கு இருந்தாலும் தாயை கைவிடக்கூடாது. வளர்ந்து வரும் உலகில் தற்போதைய இளைஞர்கள் பெற்றோர்களை விட்டு வேறு பகுதிக்கு செல்கின்றனர். எங்கிருந்தாலும் தாயை கைவிடக்கூடாது. நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும். தாயை ஒதுக்கி விடாதீர்கள். அவர்களுடன் சகஜமாக பேசுங்கள். அதுவே தாய்க்கு சந்தோசத்தை தரும். தாய் இல்லாமல் நாம் யாரும் இல்லை. மொழி, கலாச்சாரம், கடந்து உலகம் முழுவதும் உள்ள அன்னையர் அனைவரும் ஒன்றே.
மனிதனிடம் உள்ள உணர்வுகள் தாய் மூலம் மட்டுமே கிடைக்கிறது. அந்த தாய் படித்து இருந்தாலும் இல்லாவிட்டாலும் மனிதனின் அன்பு என்ற குணங்கள் தாய் மூலம் மட்டுமே வருகிறது. ராஜ்பவன் இன்று புனிதம் பெற்ற இடமாக மாறியுள்ளது. அன்னையர் வருகையால் ஆசீர்வதிக்கப்பட்ட இடமாக மாறி உள்ளது. ஆளுநர் மாளிகையில் பல நிகழ்ச்சிகள் நடந்திருந்தாலும் இந்த நிகழ்ச்சி சிறப்பு வாய்ந்தது. அன்னையர் தினத்தில் இங்கு வந்திருந்து பெருமைப்படுத்திய அன்னையர் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். இவ்வாறு கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil