தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பரமக்குடியில் உள்ள தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு நேரில் சென்று மரியாதை செலுத்தினார்.
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 2 நாள் பயணமாக நேற்று (ஏப்ரல் 18) ராமநாதபுரம் வந்தார். கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மத்திய கடல்மீன் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகளுடனும் கலந்துரையாடினார். அதன்பிறகு உச்சிப்புளி நாகாச்சி பகுதியில் உள்ள ராமகிருஷ்ண மடத்திற்கு சென்று பார்வையிட்டார். பின்பு மாலையில் தேவிப்பட்டினம் நவாஷண கோவிலுக்கு சென்றார். பின்பு கவர்னர் ராமநாதபுரம் அரசு விருந்தினர் மாளிகையில் இரவில் தங்கினார்.
இதையும் படியுங்கள்: பள்ளி மாணவனை வியந்து பாராட்டிய ஆளுநர்: ராஜ்பவனுக்கு அழைப்பு; விவரம் என்ன?
இந்தநிலையில், கவர்னர் ஆர்.என்.ரவி இன்று (ஏப்ரல் 19) காலை ராமநாதபுரம் அருகே எட்டிவயல் கிராமத்தில் உள்ள தரணி முருகேசன் என்பவரின் இயற்கை வேளாண் பண்ணைக்கு சென்றார். அங்கு இயற்கை வேளாண்மையை பயன்படுத்தி பயிரிடப்பட்டிருந்த பயிர்களை பார்வையிட்டார்.
பின்னர், பிற்பகல் 3 மணியளவில் கார் மூலம் பரமக்குடி சென்று இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். இதுதொடர்பாக ராஜ்பவன் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து, “ராமநாதபுரம், பரமக்குடியில் உள்ள இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில், சுதந்திரப் போராட்ட வீரரும், சமூக சீர்திருத்தவாதியுமான தியாகி இம்மானுவேல் சேகரனுக்கு ஆளுநர் ரவி மலர் தூவி மரியாதை செலுத்திய காட்சி,” எனப் பதிவிடப்பட்டுள்ளது. இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் மரியாதை செலுத்தும் முதல் ஆளுநர் ஆர்.என்.ரவி என்பது குறிப்பிடத்தக்கது.
பின்பு அங்கிருந்து கமுதி அருகே உள்ள பசும்பொன்னுக்கு சென்று முத்துராமலிங்க தேவர் நினைவிடத்திலும் ஆளுனர் ஆர்.என்.ரவி மரியாதை செலுத்தினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil