/indian-express-tamil/media/media_files/2025/04/09/kBy2iZcqZ7dO5iVipq7v.jpg)
மாநில சட்டமன்றத்தில் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டாலோ (அ) மீண்டும் நிறைவேற்றப்பட்டாலோ, ஆளுநர்கள் காலவரையின்றி மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதை தாமதப்படுத்தவோ (அ) நிறுத்தி வைக்கவோ முடியாது என்று உச்சநீதிமன்றம் செவ்வாயன்று (ஏப்.8) தீர்ப்பளித்தது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கிய இந்தத் தீர்ப்பு, தி.மு.க தலைமையிலான தமிழக அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே ஒரு வருடத்திற்கும் மேலாக நீடித்துவந்த மோதலில், திமுகவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. 2020-ம் ஆண்டுக்கு முன்பே 10 முக்கிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி தடுத்து நிறுத்தியிருந்தார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் நிலுவையில் வைத்திருந்தது சட்டவிரோதம் என்று தீர்ப்பளித்துள்ள உச்ச நீதிமன்றம், அவ்வாறான 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. நியாயமான காலக்கெடுவைத் தாண்டி எந்த தாமதமும் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று கூறிய உச்சநீதிமன்றம், "ஒரு மசோதா மீண்டும் சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்டவுடன் ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் தடுத்து நிறுத்தக்கூடாது என்று கூறியது. சூழ்நிலையை பொறுத்து சட்டமன்ற விஷயங்களில் முடிவுகளுக்கு ஒன்று முதல் 3 மாதங்கள் வரை குறிப்பிட்ட காலக்கெடுவை நிர்ணயித்தது.
10 மசோதாக்கள் என்ன?
தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக மசோதா, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக திருத்த மசோதா, தமிழ்நாடு பல்கலைக்கழக சட்டங்கள் திருத்த மசோதா, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக் கழக திருத்த மசோதா, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழக திருத்த மசோதா, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக திருத்த மசோதா உள்பட 10 மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றம் தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.
துணைவேந்தர் நியமனங்கள் குறித்த மசோதாக்கள்:
மாநில பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் எவ்வாறு நியமிக்கப்படுகிறார்கள் என்பதற்கான குறிப்பிடத்தக்க திருத்தங்கள் கேள்விக்குரிய மசோதாக்களில் அடங்கும். மெட்ராஸ் பல்கலை. (திருத்த) மசோதா, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக (திருத்த) மசோதா மற்றும் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக (திருத்த) மசோதா, மற்றவற்றுடன், துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை ஆளுநரிடமிருந்து பாரம்பரியமாக இந்நிறுவனங்களில் வேந்தராகப் பணியாற்றுபவருக்கு மாநில அரசுக்கு மாற்றியது.
2022 மற்றும் 2023-க்கு இடையில் நிறைவேற்றப்பட்ட பிற மசோதாக்களில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக (திருத்தம்) மசோதா, தமிழ்ப் பல்கலைக்கழக (திருத்தம்) மசோதா, அண்ணா பல்கலைக்கழக (திருத்தம்) மசோதா, கால்நடை பல்கலைக்கழகச் சட்டத்தில் 2-வது திருத்தம் மற்றும் சென்னைக்கு அருகில் புதிய சித்தமருத்துவ பல்கலைக்கழகத்தை உருவாக்குவதற்கான மசோதா ஆகியவை அடங்கும் .
முந்தைய அ.தி.முக. அரசால் நிறைவேற்றப்பட்ட மசோதா:
முந்தைய அதிமுக அரசாங்கத்தின் கீழ் ஜன.2020-ல் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்கள், தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் கட்டமைப்பு மாற்றங்களை முன்மொழிந்தன. இதில் அரசாங்கத்திற்கு ஆய்வு மற்றும் நிர்வாக மேற்பார்வை அதிகாரங்களை வழங்குதல் மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயரை மீன்வளப் பல்கலைக்கழகத்திற்கு மாற்றுதல் ஆகியவை அடங்கும்.
TNPSC நியமனங்கள், பணி நீக்க உத்தரவுகளில் தாமதம்:
2023- உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், நிலுவையில் உள்ள 10 மசோதாக்கள் பட்டியலிடப்பட்டதோடு மட்டுமல்லாமல், 50க்கும் மேற்பட்ட கைதிகளுக்கான தண்டனைக் குறைப்பு உத்தரவுகளில் கையெழுத்திடுவதில் ஏற்பட்ட தாமதம், தமிழ்நாடு பொதுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) உட்பட முக்கியமான நியமனங்களை அங்கீகரிப்பதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் மீது வழக்குத் தொடர ஒப்புதல் அளிப்பதிலும் ஏற்பட்ட தாமதம் ஆகியவற்றையும் மேற்கோள் காட்டப்பட்டது.
மிகவும் உணர்திறன் வாய்ந்த பிரச்னைகளில் 16 முஸ்லிம் குற்றவாளிகள் உட்பட 38 கைதிகளுக்கான தண்டனைக் குறைப்பு கோப்புகளை பரிசீலிப்பதில் ஏற்பட்ட தாமதமும் ஒன்றாகும். இந்த தாமதம் அரசியல் ரீதியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கோப்புகளை ஆளுநருக்கு அனுப்பியதாகவும், அங்கு அவை கிடப்பில் போடப்பட்டு இருந்ததாகவும் அரசு தரப்பில் கூறப்பட்டது.
TNPSC காலியிடங்களை நிரப்புவதற்கான திட்டங்களும் நிலுவையில் இருந்தன. ஒரு தலைவர் மற்றும் 14 உறுப்பினர்களைக் கொண்ட இந்த ஆணையம், 4 உறுப்பினர்களுடன் மட்டுமே செயல்பட்டு வந்தது. அவர்களில் ஒருவர் தலைவரின் கூடுதல் பொறுப்பை வகித்தார். தேவையான விளக்கங்கள் மற்றும் துணை விதிமுறைகள் வழங்கப்பட்ட போதிலும், நியமன செயல்முறையை தாமதப்படுத்த ஆளுநர் "சந்தேகத்திற்குரிய கேள்விகளை" எழுப்பியதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.
அரசாங்கம் எவ்வாறு பதிலளித்தது?
உரிய சட்ட நடைமுறைகளுக்குப் பிறகு இந்த மசோதாக்களை சட்டமன்றம் நிறைவேற்றிய போதிலும், அவை ஆளுநர் ரவியால் கையொப்பமிடப்படவில்லை அல்லது முறையாக நிராகரிக்கப்படவில்லை. ஆளுநர் சட்டத்தை முடக்குவதாகவும், ஜனநாயக செயல்பாட்டில் தலையிடுவதாகவும் மாநில அரசு குற்றம் சாட்டியது. அக்டோபர் 2023-ல், ஆளுநரின் "செயலற்ற தன்மை, புறக்கணிப்பு, தாமதம் மற்றும் தோல்வி" காரணமாக நிர்வாக நடவடிக்கைகள் சீர்குலைந்ததாக தமிழ்நாடு உச்ச நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனுவை தாக்கல் செய்தது.
மனுவின்படி, ஆளுநர் நடவடிக்கை எடுக்க மறுப்பது தாமதத்திற்கு அப்பாற்பட்டது மற்றும் மாநில நிர்வாகத்தில் தனது சொந்த பங்கைக் குறைக்க முயற்சிக்கும் சட்டத்தைத் தடுக்கும் "அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதற்கு" சமம்.
இந்த மோதல் நவ.2023-ல் ஒரு புதிய உச்சத்தை எட்டியது. பல மாநிலங்களில் ராஜ்பவனின் செயலற்ற தன்மை குறித்து உச்ச நீதிமன்றம் "கடுமையான கவலையை" வெளிப்படுத்திய சில நாட்களுக்குப் பிறகு, ஆளுநர் ரவி 10 மசோதாக்களையும் சட்டமன்றத்திற்கு திருப்பி அனுப்பினார். இந்த நடவடிக்கை முட்டுக்கட்டையை உடைத்த போதிலும், அது எதிர்வினையாற்றுவதாகவும் அரசியலமைப்பு ரீதியாக போதுமானதாக இல்லாததாகவும் விமர்சிக்கப்பட்டது.
திருப்பி அனுப்பப்பட்ட மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றுவதற்காக, குறிப்பாக விதி 26 இன் கீழ், நவம்பர் 18, 2023 அன்று தமிழ்நாடு சட்டமன்றம் ஒரு சிறப்புக் கூட்டத்தைக் கூட்டியது. மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு இப்போது அரசியலமைப்பு நெறிமுறையின்படி ஆளுநரின் ஒப்புதல் தேவைப்படும் என சபாநாயகர் அப்பாவு கூறினார்.
ஆளுநர் அதிகாரங்களைச் சுற்றியுள்ள தடுப்புகள்:
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அரசியலமைப்பின் 200வது பிரிவின் கீழ், ஆளுநர் ஒரு மசோதாவின் மீது காலவரையின்றி "வீட்டோ"வைப் பயன்படுத்த முடியாது என்றும் நீதிமன்றம் கூறியது. ஒரு மசோதா திருப்பி அனுப்பப்பட்டு, சட்டமன்றம் அதை மாற்றங்கள் இல்லாமல் மீண்டும் நிறைவேற்றியதும், ஆளுநர் ஒப்புதல் அளிக்க கடமைப்பட்டுள்ளார்.
தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி. வில்சன், இந்தத் தீர்ப்பை "திமுக அரசுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி" என்று கூறினார். "தவறாக ஒதுக்கப்பட்ட மசோதாவின் மீது குடியரசுத் தலைவர் எடுக்கும் எந்தவொரு நடவடிக்கையும் செல்லாது. ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. பிரிவு 200, பிரிவு 163 உடன் படிக்கப்பட வேண்டும். இது அமைச்சரவையின் ஆலோசனையின் பேரில் ஆளுநர் செயல்படுவதைக் கட்டுப்படுத்துகிறது," என்று அவர் கூறினார்.
அமைச்சரவை ஆலோசனைக்கு மாறாக ஒரு மசோதாவை ஆளுநர் ஒப்புதலை நிறுத்தினாலோ (அ) ஒதுக்கி வைத்தாலோ, அவர் 3 மாதங்களுக்குள் அதைச் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றத்தின் தீர்ப்பு தெளிவுபடுத்துகிறது. மீண்டும் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு, காலக்கெடு ஒரு மாதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவு, தமிழ்நாடு மட்டுமின்றி, இந்தியாவின் அனைத்து மாநில அரசுகளுக்கும் கிடைத்த வெற்றி" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி தத்துவத்தை நிலைநாட்ட தமிழ்நாடு போராடியது, தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமது உரையில் குறிப்பிட்டார்.
மாநில அரசுகளுக்கும் அவற்றின் ஆளுநர்களுக்கும் இடையிலான சமீபத்திய சட்ட மோதல்களில் தமிழ்நாட்டின் வழக்கும் ஒன்றாகும். மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர்களின் இதேபோன்ற தாமதங்கள் மற்றும் குறுக்கீடுகளைக் காரணம் காட்டி, கேரளா, பஞ்சாப் மற்றும் தெலுங்கானாவும் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.