பாபு ராஜேந்திரன் விழுப்புரம்
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள திருமுண்டீஸ்வரம் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ஸ்ரீ சிவலோகநாதர் கோயிலுக்கு வருகை தந்த தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி சாமி தரிசனம் செய்துவிட்டு கல்வெட்டுகள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார்.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள கிராமம் என்கிற திருமுண்டீஸ்வரம் கிராமத்தில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பழமை வாய்ந்த மிகவும் பிரசித்தி பெற்ற செல்வாம்பிகை உடனமர் ஸ்ரீ சிவலோகநாதர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் கடலூர் மாவட்டம் திருவாமூர் கிராமத்தில் பிறந்த அப்பரால் பாடல் பெற்ற தலமாகும்.
இந்த கோயிலின் தொன்மையை விளக்கும் செய்திகள் இங்குள்ள கல்வெட்டுகளில் உள்ளன. தொன்மைக்கும் பழமைக்கும் சிறப்புக்கும் பெயர் பெற்ற இக்கோயிலை காண்பதற்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நேற்று காலை 11 மணிக்கு வருகை தந்து கோயிலில் சாமி தரிசனம் செய்தார். இங்கு வருவதற்கு முன் சவுத் இந்தியன் இன்ஸ்கிரிப்ஷன் என்ற மத்திய அரசின் தொல்லியல் நூலை படித்த ஆளுனர் அதில் 32 வது பாகத்தில் 44 வது கல்வெட்டில் எழுதப்பட்டுள்ளதை படித்து வியந்துள்ளார்.
எனவே அவற்றை ஆய்வு செய்வதற்காகவும், அந்தக் கல்வெட்டு உண்மையாகவே இருக்கின்றதா என நேரில் காண்பதற்காக நேற்று திருமுண்டீஸ்வரம் கிராமத்திற்கு வருகை புரிந்தார். அப்பொழுது அவருக்கு ஈரோட்டை சேர்ந்த தொல்லியல் ஆய்வாளரும் மருத்துவருமான டாக்டர் எம்.எல்.ராஜா கோயிலில் உள்ள 32 கல்வெட்டுகளையும் படித்து அவற்றை மொழிபெயர்ப்பு செய்து, தமிழர்களின் போர்படை தளங்கள், கடல் வழி வணிகங்கள், அறிவியல் பூர்வமான கட்டிடக்கலைகள், மற்றும் வழிபாட்டுத் தலங்கள் குறித்து தமிழர்களின் பல்வேறு அளப்பரிய விஞ்ஞானங்களை ஆளுனருக்கு விளக்கினார்.
தமிழர்களின் பாரம்பரியம் மற்றும் கட்டிடக்கலையை பார்த்து வியந்த ஆளுனர் ஆர்.என் ரவி சாமி தரிசனம் மற்றும் தொல்லியல் ஆய்வுகளை முடித்துக் கொண்டு மீண்டும் சென்னை புறப்பட்டார். இதற்கான இந்து சமய அறநிலைத்துறை இணைய ஆணையர் மற்றும் அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர். காவல் உதவி கண்காணிப்பாளர் சுரேஷ் தலைமையிலான திருவெண்ணைநல்லூர் காவல் ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் காவல்துறையினரும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
கல்வெட்டில் இருந்தது என்ன. தொல்லியல் நிபுணர் டாக்டர் எம் ஆர் ராஜா விளக்கம்
இந்தக் கோயிலில் மொத்தம் 32 கல்வெட்டுகள் உள்ளன. இந்த கல்வெட்டுகளில் கி.பி.600-650 ஆண்டு பல்லவர் காலத்தில் செங்கற்களால் கொண்டு இந்த கோயில் கட்டப்பட்டது. பின்னர் கிபி 943 ஆண்டுகளில் சோழ வம்சத்து மன்னன் ராஜா ஆதித்யனின் சோழப் படையில் சேர மன்னனின் வாரிசான வெள்ளன்குமரன் என்பவர் சேனாதிபதியாக இருந்தார்.
அந்த காலகட்டத்தில் ராஷ்டிரகூடல் படையினரை தடுத்து நிறுத்துவதற்காக மலற்றாற்றங்கரையில் பல்லவர்களால் செங்கற்களால் கட்டப்பட்ட சிவலோக நாதர் சிவன் ஆலயத்தை கருங்கல் கட்டிடமாக நிறுவி அவற்றை படைத்தளமாகவும், கோயிலாகும் வழிபட்டனர். இந்தக் கோயில் தஞ்சை பெரிய கோயிலுக்கு 60 ஆண்டுகள் முந்தையதாகும்.
கலியுகத்தில் 4044 ஆம் ஆண்டில், அதாவது கலியுகத்தில் 14 லட்சத்து 77 ஆயிரத்து முப்பத்து ஏழாம் நாளில் சூரியன் உதித்த 42 வது நிமிடத்தில் மூன்று உச்சி உயரமானது, பதினாறு அடி நீளத்தில் நிழல் இருக்கும் நேரத்தில் ரேவதி நட்சத்திரமான தை மாதத்தில் மகர ஞாயிறு அன்று குடமுழுக்கு செய்யப்பட்டது என கல்வெட்டில் இருப்பதாக அவர் கூறினார்.
கோயில் வரலாறு
இறைவனின் காவலர்களாகிய "திண்டி", "முண்டி"வழிபட்டத் தலம். இத்தலத்து இறைவனை பிரமன், இந்திரன் முதலானோர் வழிபட்டு பேறு பெற்றனர். துவாபரயுகத்தில் சொக்கலிங்க மன்னன் என்பவன் வேட்டைக்கு வந்தபோது குளத்தில் ஒரு அதிசயமான தாமரை மலரைக் கண்டான். ஆள் அனுப்பி பறித்து வருமாறு கட்டளையிட்டான். அவனும் சென்று பறிக்கையில் அம்மலர் அவன் கைக்கு அகப்படாமல் சுற்றி வரலாயிற்று. அதன்மீது அம்பு எய்தபோது குளம் முழுவதும் செந்நிறமாயிற்று.
இதைக்கண்ட மன்னன் மயங்கி அதன் அருகே சென்று பார்த்தபோது அந்த மலரில் லிங்கமிருப்பதைக் கண்டெடுத்து அக்குளக்கரையில் ஆலயம் எடுப்பித்து பிரதிஷ்டைச் செய்தான் என்று வரலாறு கூறுகிறது. மன்னர் அம்பு எய்திய காரணத்தால் இன்றும் சுவாமி மீது அம்பு பட்ட தழும்பு உள்ளது. இதனால் சுவாமிக்கு "முடீஸ்வரர்" என்றும் பெயர் வந்தது. இப்பெயரே கல்வெட்டில் "மெளலி கிராமம்" என்று குறிக்கப்பெறுகிறது. மௌலி என்றால் "முடி" அல்லது "கிரீடம்" என்று பொருள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“