தமிழ்நாடு அமைச்சரவையில் புதிதாக இணைக்கப்பட்ட அமைச்சர்களுக்கான இலாகாக்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு, புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா இன்று (செப்டம்பர்) நடைபெற்றது. இந்த விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் துணை முதல்வராக பதவியேற்றார்.
அவருடன் முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி மற்றும் ஆவடி நாசர் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இவர்கள் தவிர புதிய அமைச்சர்களாக கோவி செழியன் மற்றும் ஆர்.ராஜேந்திரன் ஆகியோரும் பதவியேற்றுக் கொண்டனர்.
இந்தநிலையில், புதிதாக பொறுப்பேற்ற அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, செந்தில் பாலாஜி மீண்டும் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறைகளை தக்க வைத்துக் கொண்டார். கோவி. செழியன் உயர் கல்வித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆர்.ராஜேந்திரன் சுற்றுலாத் துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆவடி நாசருக்கு சிறுபான்மையினர் நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“