வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளதால், சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், 4 மாவட்டங்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிக்ஜாம் புயலாக மாறியது. இந்த புயல் சென்னையிலிருந்து 310 கி.மீ திசையில் நிலைகொண்டுள்ளதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், இந்த புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற்று வட தமிழகத்தை நோக்கி நகரும். தொடர்ந்து வரும் 5ம் தேதி முற்பகலில் நெல்லூர்- மசுலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த புயல் காரணமாக நாளை தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை மற்றும் புயல் எச்சரிக்கை காரணமாக அரசின் சார்பில் முன்னேற்பாடுகள் மற்றும் பேரிடர் மீட்புக்குழுவினர் தயார் நிலையில் இருக்கும் நிலையில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் இயங்கி வரும் பல்வேறு நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்ட டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“