சென்னையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து தற்போது தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் உதவி மற்றும் மீட்பு பணிகளுக்கு தொடர்புகொள்ள வேண்டிய வாட்ஸ்அப் உதவி எண்ணை தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல பகுதிகளில் உள்ள ஏரி, ஆறு உள்ளிட்ட நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வரும் நிலையில்,கடந்த வாரம் பெய்த கனமழையின் காரணமாக தமிழகத்தின் தலைநகரான சென்னை தண்ணீரில் மூழ்கியது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில், தங்கள் உடைமைகளை இழந்து தத்தளித்து வந்தனர்.
தற்போது சென்னையில் நிலைமை சீரடைந்து வரும் நிலையில், கடந்த இரு தினங்களாக தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குமரிக்கடல் ஒட்டிய பகுதிகளில் ஏற்பட்டுள்ள வலிமண்டல மேலடுக்கு சுழற்சி நகர்ந்து வருவதால், தென் மாவட்டங்களாக தூத்துக்குடி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தென் தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரி பாலச்சந்திரன் அறிவித்துள்ளதால் மக்கள் கடும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும் அமைச்சர் உதயநிதி உள்ளிட்ட சில அமைச்சர்கள் தூத்துக்குடி தென்காசி மாவட்டங்களுக்கு சென்றுள்ளனர்.
மேலும் தென்காசி, தூத்துக்குடி நெல்லை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் வீடியோ கான்ப்ரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்திய நிலையில், திமுக தொண்டர்கள் அரசு அதிகாரிகளுக்கு மீட்பு பணிகளில் உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து தென் தமிழகத்தின் பல பகுதிகளில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்ற வருகிறது.
இதனிடையே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், மீ்ட்பு பணிகள், நிவாரணம், மருத்துவ உதவி தேவைப்படும் மக்கள் தொடர்புகொள்ளும் வகையில் தமிழக அரசின் சார்பில் வாட்ஸ்அப் உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. வரலாறு காணாத மழையால் பாதிக்கப்பட்டுள்ள திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் தமிழ்நாடு அரசின் வாட்ஸ்அப் எண் - 8148539914 மற்றும் ட்விட்டர் மூலமாக நிவாரண உதவிகள், மருத்துவ உதவிகள், மீட்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றை தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.