அரசு மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் உயிரிழந்த கால்பந்து வீராங்கனையும், கல்லூரி மாணவியுமான பிரியா குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் மாணவி பிரியா. சென்னை ராணி மேரி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சிறுவயது முதலே, கால்பந்து விளையாட்டில் ஆர்வமாக இருந்த அவர், தேசிய அளவிலான போட்டிகளில் கலந்துக் கொண்டு பல சாதனைகளை படைத்துள்ளார்.
இந்தநிலையில், சமீபத்தில் கால்பந்து விளையாட்டில் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தபோது, மாணவி பிரியாவுக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, அவர் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பரிசோதனை செய்துள்ளார். அப்போது அவருக்கு காலில் தசைப்பிடிப்பால் சவ்வு விலகி இருப்பது எக்ஸ்ரே மூலம் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மருத்துவர்களின் பரிந்துரைப்படி பிரியா தனது வீட்டின் அருகே உள்ள கொளத்தூர் அரசு புறநகர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து அளித்து வந்த நிலையில், தசைப்பிடிப்புக்கு அறுவை சிகிச்சையும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஆனாலும், பிரியாவுக்கு காலில் வலி குறையாததால், மீண்டும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு மாணவிக்கு மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் செய்த பரிசோதனையில், காலில் தசைகள் அனைத்தும் அழுகக்கூடிய நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது. எனவே, பிரியாவின் காலை அகற்ற வேண்டும் என கூறி, அவரது காலை மருத்துவர்கள் அகற்றினர். தொடர்ந்து, அவர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கால்பந்து வீராங்கனை பிரியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அரசு மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil