தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய தலைவராக முன்னாள் டி.ஜி.பி. சுனில்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு நேற்று பிறப்பித்தது.
தமிழக சீருடை பணியாளர் தேர்வு வாரியம் என்பது சீருடை பணிகளுக்கான தேர்வுகளை நடத்தி வருகிறது. அதன்படி, இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர், தீயணைப்பு வீரர், காவல் சார்பு ஆய்வாளர் (தாலுகா, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை) மற்றும் நிலைய அதிகாரி (தீயணைப்புத்துறை), காவல் சார்பு ஆய்வாளர் (தொழில் நுட்பம்), காவல் சார்பு ஆய்வாளர் (விரல் ரேகை) உள்ளிட்ட தேர்வுகளை நடத்தி வருகிறது.
இந்தநிலையில், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய தலைவராக இருந்த டி.ஜி.பி. சீமா அகர்வால், கடந்த சில நாட்களுக்கு முன் புதிதாக உருவாக்கப்பட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு டி.ஜி.பி.யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இந்தநிலையில், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் புதிய தலைவராக முன்னாள் டி.ஜி.பி. சுனில்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு நேற்று பிறப்பித்தது.
சுனில்குமார் 1988 ஆம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியாக போலீஸ்துறையில் காலடி எடுத்து வைத்தார். தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்ட சுனில்குமார், சென்னையில் போக்குவரத்து பிரிவு கூடுதல் ஆணையராக செயல்பட்டார். அப்போது பசுமை வழித்தடம் ஏற்பாடு செய்து உடல் உறுப்புகளை கொண்டு சென்று பாராட்டு பெற்றார். சுனில்குமார் கடந்த 2021 ஆம் ஆண்டு சிவில் சப்ளை சி.ஐ.டி. பிரிவில் டி.ஜி.பி.யாக பணியாற்றி ஓய்வு பெற்றார்.
சுனில்குமார், ஏற்கனவே தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தில் ஐ.ஜி., கூடுதல் டி.ஜி.பி., டி.ஜி.பி.யாக பணியாற்றி இருக்கிறார். தற்போது ஓய்வு பெற்ற பின்னரும் அவருக்கு இந்த பதவி கிடைத்துள்ளது. ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஒருவர் இந்த பதவியில் நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“