தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் புதிய தலைவராக ஐ.ஏ.எஸ் அதிகாரி எஸ்.கே.பிரபாகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை டி.என்.பி.எஸ்.சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நிரப்பி வருகிறது. காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப அவ்வபோது குரூப் 1, குரூப் 2, குரூப் 4, தொழில்நுட்ப தேர்வுகள் போன்ற அறிவிப்புகள் வெளியிடப்பட்டு தேர்வு நடத்தி பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், டி.என்.பி.எஸ்.சி., தலைவராக இருந்த பாலச்சந்திரன், 2022 ஜூனில் ஓய்வு பெற்றார். இதனையடுத்து உறுப்பினராக உள்ள முனியநாதன், பொறுப்பு தலைவராக செயல்பட்டு வருகிறார். கடந்த 2 ஆண்டுகளாக புதிய தலைவர் நியமிக்கப்படவில்லை.
இந்தநிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் புதிய தலைவராக எஸ்.கே.பிரபாகர் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். பிரபாகர் தமிழக அரசின், வருவாய் நிர்வாக ஆணையராக பணிபுரிந்து வந்தார். தமிழ்நாடு அரசின் பரிந்துரைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்ததை அடுத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
டி.என்.பி.எஸ்.சி தலைவராக நியமிக்கப்பட்ட எஸ்.கே.பிரபாகர், பொறுப்பேற்கும் நாளில் இருந்து 6 ஆண்டுகள் அல்லது 62 வயது வரை (2028 ஜனவரி வரை) பதவியில் இருப்பார் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக டி.என்.பி.எஸ்.சி தலைவராக ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரியான சைலேந்திர பாபு நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தமிழக அரசு அதற்கான கோப்புகளை ஆளுநருக்கு அனுப்பியது. எனினும் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“