சென்னையில் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு மாற்றாக கிளாம்பாக்கம் மற்றும் மாதவரத்தில் இருந்து தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் வெளி மாநிலங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் போக்குவரத்து மற்றும் மக்கள் பயணடையும் வகையில் கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பேருந்து நிலையத்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து இங்கிருந்து தமிழகம் முழுவதும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே வெளி மாநிலங்களுக்கு செல்லும் பேருந்துகள் இயங்கும் வகையில் மாதவரத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு இயங்கி வரும் நிலையில், தற்போது தமிழகத்தின் உள்ளூர் பேருந்துகள் இயங்கும் வகையில் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் திறக்கப்பட்டு இயங்கி வருகிறது. இதன் காரணமாக கோயம்பேடு பேருந்து நிலையம், மக்கள் பயன்பாடுகளில் இல்லாமல் போகும் சூழல் உருவாகியுள்ளது.
இதனிடையே கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு மாற்றாக கிளாம்பாக்கம் மற்றுமு் மாதவரத்தில் இருந்து அரசு பேருந்துகள் முழுமையாக இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, கோயம்பேட்டிற்கு மாற்றாக கிளாம்பாக்கம் மற்றும் மாதவரத்தில் இருந்து அரசு பேருந்துகள் முழுமையாக இயக்கப்படும். வடசென்னை மக்களுக்காக மாதவரத்தில் இருந்து 160 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் போக்குவரத்து துறை சார்பில் கட்டண விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி மாதவரத்தில் இருந்து புறப்படும் பேருந்துகள் ரெட்டேரி, அம்பத்தூர், மதுரவாயல் பைபாஸ் வழியாக பெருங்களத்தூர் செல்லும். இதில் மாதவரத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை 40 ரூபாயும், ரெட்டேரியில் இருந்து கிளாம்பாக்கம் வரை 35 ரூபாயும் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அம்பத்தூரில் இருந்து கிளம்பாக்கத்திற்கு 30 ரூபாயும், மதுரவாயலில் இருந்து கிளாம்பாகத்திற்கு 25 ரூபாயும், பெருங்களத்தூரில் இருந்து 10 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கிளாம்பாக்கத்தில் இருந்து வழக்கமாக பல்வேறு ஊர்களுக்கு வசூலிக்கப்படும் கட்டணத்துடன் இந்த கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“