ஜல்லிக்கட்டு போட்டி இல்லை என்றால் நாட்டு மாடு இனம் எப்போதோ அழிந்திருக்கும் என்று தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வாதாடிய வழக்கறிஞர் கபில் சிபில் கூறியுள்ளார்.
தமிழகத்தில் ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகை காலத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம். தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு போட்டியான இதில் நூற்றுக்கணக்கான வீரர்கள் பங்கேற்று மாடு பிடித்து பரிசுகளை பெற்று வருகிறார். இந்நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தடை விதிக்கப்பட்ட நிலையில். தமிழக அரசு அவசர சட்டம் இயற்றி கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தி வருகிறது.
ஆனால் தமிழக அரசின் அவசர சட்டத்தை எதிர்த்து பீட்டா அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது. இந்த மனுவை நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் விசாரித்து வருகின்றனர். இதில் இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் காளைகள் எப்படி 100 மீட்ட தூரம் ஓடுகின்றன? இதனால் காளைகளுக்கு காயம் ஏற்படாதா? கேளிக்கை விளையாட்டான இதில் காளைகளுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும் என்று கேள்வி எழுப்பினர்.
நீதிபதிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்த தமிழக அரசு சார்பில் வாதாடிய வழக்கறிஞர் கபில் சிபில் காளைகள் சில மரணித்திருப்பது உண்மைதான். ஆனால் இதை தடுக்க ஜல்லிக்கட்டு அனுமதி சட்டத்தில் விதிகள் உள்ளது. இதன் காரணமாக மரணங்கள் தடுக்கப்படுகின்றன. ஜல்லிக்கட்டு வெறும் கேளிக்கை அல்ல. ஜல்லிக்கட்டு காரணமாக நாட்டுமாடுகளின் அங்கீகாரம் அதிகரிக்கும். நாட்டு காளைகளை பாதுகாக்க ஜல்லிக்கட்டு முக்கியம் என்று கூறினார்.
தொடர்ந்து இது குறித்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள் குழு, காளைகள் உடல் ரீதியாகவோ மன ரீதியாகவோ துன்புறுத்த கூடாது. காளைகளை நாம் பொம்மை போல்பயன்படுத்துவது தவறு என்று கூறியுள்ளார். இதற்கு பதில் அளித்த கபில் சிபில், காளைகள் துன்புறுத்தப்படவில்லை. அப்படி இருக்கிறது என்றாலும் கூட மற்ற விலங்குகளை வைத்து போட்டிகள் நடத்தப்படுவது தவறில்லையா என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் ஜல்லிக்கட்டு என்பது காளைகளின் வீரத்தை காட்டும் ஒரு போட்டி. காளைகள் ஏன் முக்கியம் என்பதை எடுத்துரைக்க ஜல்லிக்கட்டு மிகவும் அவசியம். அப்படி என்றால் குதிரைகளை வைத்து போட்டிகள் நடப்பதில்லையா? குதிரைகள் குறித்து இவர்கள் ஏன் கேள்வி எழுப்பவில்லை. காளைகளுக்கு சாராயம் கண்களில்மிளகாய்தூள பயன்படுத்தப்படுகிறது என்று சொல்கிறார்கள். ஆனால் காளை வைத்திருப்பவர்களிக் குடும்பத்தினர் அவற்றை தங்களது பிள்ளைகள் போலத்தால் பார்க்கிறார்கள்.
ஜல்லிக்கட்டு காரணமாகவே நாட்டு மாடுகள் உயிர்வாழ்கின்றன. இந்த விளையாட்டுக்காக ஜல்லிக்கட்டு காளைகள் சிறப்பாக பாதுகாக்கப்படுகின்றன. ஜல்லிக்கட்டு இல்லை என்றால் வெளிநாட்டு காளைகள் ஆதிக்கம் அதிகரிக்கும். ஜல்லிக்கட்டு மூலம் நாட்டு மாடுகள் எப்படி பாதுகாக்கப்படுகிறது என்று கேட்ட நீதிபதிக்கு பதில் அளித்த கபில் சிபில், ஜல்லிக்கட்டுக்கு பின்தான் காளைகளை மாடுகளுடன் இணைய வைப்பார்கள்.
இனப்பெருக்கம் செய்ய நாட்டு மாடுகளின் உற்பத்தியை பெருக்க இது மிகவும் அவசியம். ஜல்லிக்கட்டு நடக்கவில்லை என்றால் இனப்பெருக்கத்திற்கு சாத்தியம் இல்லை. பாரம்பரிய இந்திய காளைகளை பாதுகாக்க வேண்டும் என்றால் ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் நமது நாட்டில் பாரம்பரிய விலங்குகள் அழிந்து வருவதால் தான் தற்போது வெளிநாட்டில் இருந்து சிறுத்தைகள் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“