Advertisment

கடற்கரை தாது மணல் ஏற்றுமதி இழப்பு; தனியார் நிறுவனங்களிடம் ரூ.5,832 கோடியை வசூலிக்க தமிழக அரசு உத்தரவு

கடற்கரை தாது மணல் ஏற்றுமதியில் அரசுக்கு ரூ.5832 கோடி இழப்பு; சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்களிடம் இழப்பை வசூலிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு

author-image
WebDesk
New Update
கடற்கரை தாது மணல் ஏற்றுமதி இழப்பு; தனியார் நிறுவனங்களிடம் ரூ.5,832 கோடியை வசூலிக்க தமிழக அரசு உத்தரவு

Tamilnadu govt order to collect Rs.5,832 crore from sand miners: கடந்த 2000-01 ஆம் ஆண்டு முதல் கடற்கரை தாது மணல் ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனங்களிடம் இருந்து ரூ.5,832.44 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் உள்ள அனைத்து கையிருப்புகளையும் பறிமுதல் செய்யவும், 2000-01 ஆம் ஆண்டு முதல் நடந்த சட்டவிரோத கடற்கரை மணல் ஏற்றுமதி குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்கவும் முடிவு செய்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Advertisment

2015 ஆம் ஆண்டு தானாக முன்வந்து தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்து வரும் தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி டி. பாரத சக்கரவர்த்தி ஆகியோர் முன் தாக்கல் செய்யப்பட்ட எதிர் பிரமாணப் பத்திரத்தில்,1.55 கோடி டன் மணல் இருப்பை பறிமுதல் செய்து மத்திய பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ரேர் எர்த்ஸ் லிமிடெட் நிறுவனத்திடம் ஒப்படைக்க நீதிமன்றத்தின் அனுமதியை தொழில் துறை செயலாளர் எஸ். கிருஷ்ணன் கோரினார்.

மத்திய மற்றும் மாநில அரசு அறிக்கைகளின் அடிப்படையில், சட்டவிரோத கடற்கரை மணல் எடுக்கப்பட்ட அளவையும், பொதுக் கருவூலத்திற்கு ஏற்பட்ட இழப்பையும் மதிப்பிட்டு அமிகஸ் கியூரி (ஒரு குறிப்பிட்ட வழக்கில் நீதிமன்றத்திற்கு ஒரு பாரபட்சமற்ற ஆலோசகர்) V. சுரேஷ் தாக்கல் செய்த மூன்று அறிக்கைகளை உறுதியாக ஆதரித்த தொழில்துறைச் செயலாளர், அறிக்கையில் குறிப்பிட்டுள்ள இழப்புகளை சம்பந்தப்பட்டவர்களிடம் வசூலிக்க திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்தின் 1957 இன் விதிகளை மீறியதற்காக, சட்ட விரோத மணல் ஏற்றுமதியில் ஈடுபட்ட நிறுவனங்கள் மீது சம்பந்தப்பட்ட சிறப்பு நீதிமன்றங்களில் புகார் அளிக்குமாறு அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்படும் என்றும் தொழில்துறை செயலாளர் கூறினார்.

தமிழக அரசு முதலில் 64 கடற்கரை மணல் எடுக்கும் உரிமங்களை (திருநெல்வேலியில் 52 மற்றும் தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் தலா 6) ஏழு நிறுவனங்களுக்கு வழங்கியதாக எதிர் வாக்குமூலத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இருப்பினும், பெரிய அளவிலான சட்டவிரோத மணல் கொள்ளை பற்றிய புகார்களைத் தொடர்ந்து, அரசாங்கம் 2013 இல் கடற்கரை மணல் எடுக்க மற்றும் கொண்டு செல்ல தடை விதித்தது.

கடற்கரை மணல் கொள்ளை தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஐஏஎஸ் அதிகாரி ககன்தீப் சிங் பேடி தலைமையில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டது. மூன்று மாவட்டங்களில் 234.55 ஹெக்டேர் பரப்பளவில் 1.01 கோடி டன் (திருநெல்வேலியில் 90.29 லட்சம், தூத்துக்குடியில் 10.29 லட்சம், கன்னியாகுமரியில் 54,446) மணல் அள்ளப்பட்டதாக 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் அந்தக் குழு அறிக்கை தாக்கல் செய்தது.

அதன்பிறகு, ஏப்ரல் 2017 இல், தனியார் மணல் எடுக்கும் நிறுவனங்களிடம் உள்ள மணல் கையிருப்பை மதிப்பிடுவதற்கு ஐஏஎஸ் அதிகாரி சத்யபிரதா சாஹூ தலைமையில் மற்றொரு குழுவை உயர்நீதிமன்றம் அமைத்தது. மூன்று மாவட்டங்களிலும் 1.55 கோடி (திருநெல்வேலியில் 1.37 கோடி, தூத்துக்குடியில் 12.09 லட்சம், கன்னியாகுமரியில் 5.93 லட்சம்) டன் இருப்பு உள்ளதாக 2018 ஏப்ரலில் குழு அறிக்கை தாக்கல் செய்தது.

இதையும் படியுங்கள்: ரூ5 கோடி தொழிற்சாலை அபகரிப்பு… ஜெயக்குமார் மீது 3-வது வழக்கு!

சத்ய பிரதா சாஹூ கமிட்டி, மணல் எடுக்கும் நிறுவனங்கள் அறிவித்த கையிருப்புகளுக்கும், கிடைத்த அளவுகளுக்கும் இடையே 69.89 லட்சம் டன்கள் பெரிய வித்தியாசத்தைக் கண்டறிந்தது. மேலும், அமிகஸ் கியூரி, பல்வேறு அறிக்கைகளின் விரிவான மதிப்பீட்டிற்குப் பிறகு, தடைக்கு முந்தைய காலத்தில் (2000 மற்றும் 2013 க்கு இடையில்) மணல் எடுக்கும் நிறுவனங்கள் தமிழக அரசுக்கு ரூ.3,829.76 கோடி இழப்பை ஏற்படுத்தியதைக் கண்டறிந்தனர்.

தடைக்கு பிந்தைய காலத்தில் (2013 முதல் 2016 வரை) ரூ.2,002.67 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அமிக்ஸ் கியூரி மதிப்பிட்டுள்ளார், ஏனெனில் மாநிலத்தில் தாது மணல் எடுக்க மற்றும் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும் மணல் எடுக்கும் நிறுவனங்கள் வெளிநாடுகளுக்கு தாது மணலை ஏற்றுமதி செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்த மதிப்பீட்டை ஏற்று, தூத்துக்குடியில் உள்ள சுங்கத்துறை ஆணையரிடம் இருந்து பெறப்பட்ட தரவுகளின்படி, 2013-14 மற்றும் 2016-17 வரை 16.74 லட்சம் டன் கடற்கரை மணல் தாதுக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இருப்பினும், இந்த கனிமங்கள் சட்டப்பூர்வமாக எடுக்கப்பட்டதா இல்லையா என்பதை சுங்கத்துறை அதிகாரிகளால் உறுதிப்படுத்த முடியவில்லை.

2016 நவம்பரில் தான், தூத்துக்குடியில் உள்ள சுங்கத்துறை ஆணையர், ஏற்றுமதி செய்யப்படும் கடற்கரை மணல் தாதுக்களின் மூலத்தை சரிபார்க்க வலியுறுத்தத் தொடங்கினார். 2016 டிசம்பரில், திருநெல்வேலி ஆட்சியர் கொச்சி, விசாகப்பட்டினம் மற்றும் மங்களூரு ஆகிய இடங்களில் உள்ள சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கடிதம் எழுதி, தமிழகத்தைச் சேர்ந்த சட்டவிரோத மணல் எடுக்கும் நிறுவனங்களின் தாது மணலை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கக் கூடாது என்று கேட்டுக்கொண்டார்.

இதன் விளைவாக, கொச்சி துறைமுகத்தில் இருந்து வி.வி. மினரல்ஸ் நிறுவனத்தின் 3,107 டன் கடற்கரை தாது மணல் ஏற்றுமதி தடுக்கப்பட்டது. கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மணல் எடுக்கும் நிறுவனங்களின் சீல் வைக்கப்பட்ட வளாகத்தில் இருந்து கடற்கரை மணல் திருடப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன. எனவே, அங்கு கலெக்டர்கள் சிசிடிவி கேமராக்களை பொருத்தினர், ஆனால் அந்த கேமராக்களின் மின் இணைப்பை மர்ம நபர்கள் துண்டிக்க முயன்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் சீல் வைக்கப்பட்ட வளாகங்களில் கண்காணிப்பதற்காக 103 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், அந்த கேமராக்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது தொடர்பாக மாவட்டத்தில் ஜனவரி மாதம் 3 எப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தொழில்துறை செயலாளர் கூறினார். எனவே, கனிமங்கள் மறுமதிப்பீடு செய்யப்பட்டு, இரண்டு வாரங்களில் பணிகள் முடிவடையும் என்று எதிர் வாக்குமூலத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Chennai High Court Sand Mines
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment