இதயம் மற்றும் சீறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் அமைச்சர் கக்கனின் மகனுக்கு தனி மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
முன்னாள் முதல்வர் காமராஜர் ஆட்சி காலத்தில் உள்துறை, பொதுப்பணித்துறை வேளாண்மைத்துறை உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் அமைச்சராக பதவி வகித்தவர் கக்கன். சுதந்திர போரட்ட வீரரான கக்கன், எளிமையான மனிதர் என்று பெயர் பெற்றவர்.
இதையும் படியுங்கள்: மருத்துவ படிப்புகளுக்கான கட்டண முறை; தேசிய மருத்துவ ஆணையத்திற்கு ஐகோர்ட் முக்கிய உத்தரவு
இந்தநிலையில், இவரது இரண்டாவது மகன் பாக்கியநாதன் (79), இதய மற்றும் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார்.
பாக்கியநாதனிடம் முதல்வர் காப்பீடு திட்ட அட்டை இல்லாததால், சில பரிசோதனைகளுக்கு ரூ.4 ஆயிரம் அளவுக்கு செலவு செய்ய வேண்டி இருந்தது. இதனால், மருத்துவ செலவுக்கு உதவுமாறு, முதல்வர் தனிப் பிரிவில் பாக்கியநாதனின் மனைவி சரோஜினி தேவி சமீபத்தில் மனு கொடுத்தார்.
இந்தநிலையில், பாக்கியநாதனுக்கு அனைத்து மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சையை இலவசமாக அளிக்கும்படி முதல்வர் அலுவலகத்தில் இருந்து மருத்துவமனை நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும், முதல்வர் அலுவலக அறிவுறுத்தலின்படி, பாக்கியநாதனுக்கு தனி மருத்துவக் குழு அமைக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil