/tamil-ie/media/media_files/uploads/2021/09/kkssr.jpg)
சென்னையில் ஜேப்பியார் கல்வி குழுமம் ஆக்கிரமிப்பு செய்திருந்த ரூ.2000 கோடி மதிப்பிலான 91.4 ஏக்கர் நிலம் தமிழக அரசால் மீட்கப்பட்டுள்ளது.
சென்னை செம்மஞ்சேரியில் உள்ள, ஜேப்பியார் கல்வி குழுமத்தை சேர்ந்த செயின்ட் ஜோசப் கல்லூரி நிர்வாகம் 91.4 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்திருப்பதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் கல்லூரி நிர்வாகம் மாணவிகள் தங்கும் விடுதிகள் உள்ளிட்ட கட்டிடங்களை கட்டியுள்ளது. 20 ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கில் நீதிமன்ற உத்தரவுப்படி இன்று ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டுள்ளது.
சென்னை மாவட்ட ஆட்சியர் விஜய ராணி, தமிழ்நாடு நில மேம்பாட்டு ஆணையர் நாகராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது. இதனையடுத்து அந்த இடத்தில் அரசுக்கு சொந்தமான இடம் என அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது. இதனிடையே மீட்கப்பட்ட நிலத்தை வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தென்சென்னை எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், சோழிங்கநல்லூர் எம்.எல்.ஏ. அரவிந்த் ரமேஷ் ஆகியோர் பார்வையிட்டனர்.
அப்போது, கல்லூரி நிர்வாகம் ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டப்பட்டிருக்கும் விடுதியில் உள்ள மாணவிகளை வேறு இடத்திற்கு மாற்றியதும், விடுதிக் கட்டிடம் இடிக்கப்படும் என அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் தமிழ்நாடு முழுவதும் இதுபோன்ற ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், ஆக்கிரமிப்பு நிலங்களை கண்டறிய மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார். இதேபோல், குறிப்பிட்ட பயன்பாட்டிற்காக குத்தகைக்கு எடுத்த நிலத்தை பயன்படுத்தாமல் இருந்தாலும் அவற்றையும் மீட்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.