Tamilnadu Govt rejects Sastra University land swapping offer: தஞ்சாவூரில் உள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழகம் அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள நிலையில், ஆக்கிரமித்துள்ள நிலத்தின் அளவிற்கு பதிலாக மாற்று இடத்தில் 31.37 ஏக்கர் நிலத்தை மாற்றிக் கொள்ள முன்வந்ததை தமிழக அரசு நிராகரித்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் திருமலை சமுத்திரம் கிராமத்தில் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைகழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த 35 ஆண்டுகளாக தாங்கள் அனுபவித்து வரும் 31.37 ஏக்கர் பரப்பளவிலான அரசு புறம்போக்கு நிலத்தை தங்களுக்கு ஒதுக்கும்படி சாஸ்த்ரா பல்கலைக்கழகம் வைத்த கோரிக்கையை நிராகரித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. மேலும், நான்கு வாரங்களுக்குள் இடத்தை காலி செய்யும்படி தஞ்சாவூர் வட்டாட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இதையும் படியுங்கள்: சுரானா நிறுவனத்தின் ரூ.54 கோடி சொத்துக்கள் முடக்கம் !
இந்த உத்தரவை ரத்து செய்ய கோரி சாஸ்த்ரா பல்கலைக்கழக உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு கடந்த முறை தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அரசு ஒதுக்கிய நிலத்திற்கு பதிலாக மாற்று இடம் வழங்க தயாராக இருப்பதாக சாஸ்த்ரா பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நிலம் இடமாற்று தொடர்பான முன்மொழிவுகளை அனுமதித்து மே மாதம் அரசு இயற்றிய அரசாணையின் பார்வையில், மாற்று நிலத்தை வழங்குவதற்கான பல்கலைகழகத்தின் முன்மொழிவை பரிசீலிக்குமாறு அரசுக்கு வழிகாட்டுதல் கோரி பல்கலைகழகத்தால் முன்வைக்கப்பட்ட ஒரு மனு மீண்டும் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு நிலத்தை 35 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமித்து, கட்டிடங்களை எழுப்பிவிட்டு, தற்போது மாற்று இடங்களை வழங்குவதாக பல்கலைக்கழக தரப்பு கூறுவதை ஏற்க முடியாது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறு செய்வது ஆக்கிரமிப்பை ஊக்குவிப்பதாக அமையும் என்று கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜே.ரவீந்திரன், நிலம் இடமாற்று சலுகையை சென்னை உயர்நீதிமன்றம் செவ்வாய்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொண்டபோது கூறினார்.
அரசு நிலத்தை சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம் அபகரித்துள்ளதைக் குறிப்பிட்ட கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன், "உயர் நீதிமன்ற நிலத்தை யாராவது ஆக்கிரமித்து மாற்று நிலம் வழங்க முடியுமா?" என்று கேள்வி எழுப்பினார். இதற்கு, தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி என்.மாலா ஆகியோர் அடங்கிய முதல் பெஞ்ச், மாற்று நிலத்தை நீங்கள் (அரசு) ஏற்றுக்கொள்வதன் மூலம், ஆக்கிரமிப்பை ஊக்குவிக்கவோ அல்லது ஆதரவாகவோ இல்லை, அது சிக்கலை தீர்க்க உதவும். இருப்பினும், ஆக்கிரமிப்பு இருந்தால் அகற்ற வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறோம்,'' என்று கூறியது.
அப்போது, அத்தகைய முன்மொழிவை ஏற்க முடியாது என்று மீண்டும் வலியுறுத்திய கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன், மனுதாரர் குறிப்பிடும் அரசாணை பல்கலைக்கழகத்திற்கு பொருந்தாது. பல்கலைக்கழகத்துக்குச் சொந்தமான மாற்று நிலத்தை ஏற்று, பல்கலைக்கழகம் வசம் இருந்த 31.37 ஏக்கர் அரசு நிலத்தை பல்கலைக்கழகத்திற்கே ஒதுக்க வேண்டும் என்ற பல்கலைக்கழகத்தின் முன்மொழிவை நிராகரித்து பிப்ரவரி 23 தேதியிட்ட அரசாணை ஒன்றை அரசு ஏற்கனவே நிறைவேற்றியுள்ளது. இப்போது, பல்கலைக்கழகம் அத்தகைய முன்மொழிவுகளை அனுமதித்து தமிழக அரசு இயற்றிய சமீபத்திய அரசாணையின் படி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பரிசீலிக்க அரசுக்கு உத்தரவிடக் கோரி ஒரு புதிய மனு மூலம் நீதிமன்றத்தை அணுகியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.