Tamilnadu govt release new guidelines for Jallikattu: ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தமிழக அரசு புதிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகவும் பிரபலம். தை மாதம் நெருங்கிவிட்டாலே பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெறும். ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14 ஆம் தேதி அவனியாபுரத்திலும், மறுநாள் ஜனவரி 15 ஆம் தேதி பாலமேட்டிலும், அதற்கு அடுத்த நாள் ஜனவரி 16 ஆம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம்.
அந்தவகையில், இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. அலங்காநல்லூரில் வாடிவாசல் அருகே உள்ள முத்தாலம்மன் கோவில் முன்பாக ஜல்லிக்கட்டுக்கான முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சியும் இன்று அதிகாலை நடைபெற்றது. இந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலக புகழ் பெற்றது. இந்த ஜல்லிக்கட்டை காண வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் உற்சாகமாக வருவதுண்டு.
இருப்பினும் தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் ஜல்லிகட்டுப் போட்டிகள் நடக்குமா என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதனால் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறுவது உறுதியாகியுள்ளது.
ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய வழிமுறைகள்
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை காண 150 பார்வையாளர்கள் அல்லது அனுமதிக்கப்பட்ட இருக்கை எண்ணிக்கையில் 50 சதவீதத்திற்கு மிகாமல் எது குறைவானதோ அந்த எண்ணிக்கையில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட வேண்டும்.
ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு மற்றும் வடமாடு நிகழ்ச்சிகளில் மாடுபிடி வீரர்கள் 300 நபர்களுக்கு மிகாமல் கலந்துகொண்டு நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்படுகிறது. எருதுவிடும் நிகழ்ச்சியில் 150 வீரர்களுக்கு மிகாமல் கலந்துகொண்டு நிகச்சி நடத்த அனுமதிக்கப்படுகிறது.
காளைகளுடன் உரிமையாளர் மட்டும் ஒரு உதவியாளருக்கு மட்டுமே அனுமதி உண்டு. காளையின் உரிமையாளர் மற்றும் அவரது உதவியாளருக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அடையாள அட்டை வழங்கப்படும். மேலும், அடையாள அட்டை இல்லாத நபர்களுக்கு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெறும் வளாகத்திற்குள் நுழைய அனுமதி இல்லை.
மாடு உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் 2 தவணை தடுப்பூசி செலுத்திய சான்று அவசியம்.
மேலும் மாடு உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கொரோனா பரிசோதனையில் கொரோனா இல்லை என்ற சான்றிதழ் அவசியம். இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil