திருச்சிராப்பள்ளி வெஸ்ட்ரி மேல்நிலைப் பள்ளியில் அரசின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அரசு பொருட்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்த பொருட்காட்சியை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பேசுகையில், தமிழ்நாடு முதலமைச்சரின் பொற்கால ஆட்சியில் செயல்படுத்தப்படும் மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்கள் எளிதாக அறிந்து பயன்பெறும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய அரசுப்பொருட்காட்சி பல்வேறு மாவட்டங்களிலும் நடத்தப்படுகிறது.

அதன் அடிப்படையில் திருச்சி மாவட்டத்தில் இன்று (நேற்று) தொடங்கப்பட்டுள்ள அரசுப்பொருட்காட்சியில், செய்தி மக்கள் தொடர்புத்துறை, நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சித் துறை, வேளாண்மை உழவர் நலத்துறை, வருவாய்த் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, கூட்டுறவுத்துறை உள்ளிட்ட 26 அரசுத்துறை அரங்குகளும், திருச்சி மாநகராட்சி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், ஆவின் உள்ளிட்ட 8 அரசு சார்பு நிறுவனங்களின் என மொத்தம் 34 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த ஆட்சியில் ஏழை, எளிய அடித்தட்டு மக்களின் வாழ்வை மேம்படுத்தும் வகையில் எண்ணில் அடங்கா திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக மகளிருக்கு இலவச பேருந்து பயணத் திட்டம், அரசுப்பள்ளியில் பயின்று கல்லூரிக்குச் செல்லும் மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம், மாணவ, மாணவிகளுக்கு காலை உணவுத்திட்டம் என பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அத்தகைய திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் ஒவ்வொரு துறையின் சார்பிலும் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் இந்த அரசுப் பொருட்காட்சியில் இடம் பெற்றுள்ளது. இன்று தொடங்கி தொடர்ந்து 45 நாட்களுக்கு இந்த பொருட்காட்சி நடத்தப்படும். எனவே, பொதுமக்கள் அனைவரும் குடும்பத்தோடு வருகை தந்து பொருட்காட்சியினை கண்டுகளிக்க வேண்டும் என கூறியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து வருவாய்த்துறையின் சார்பில் 7 நபர்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா, தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் 11 நபர்களுக்கு ரூ.1.10 கோடி மதிப்பிலான கலமந்தை அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீட்டிற்கான ஆணை, மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.21 லட்சம் மதிப்பில் உதவி உபகரணங்கள், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் பல்வேறு வேளாண் உபகரணங்கள், கூட்டுறவுத்துறையின் சார்பில் 24 மகளிர் சுய–உதவிக்குழுக்களுக்கு ரூ.77 லட்சம் மதிப்பிலான கடனுதவி தள்ளுபடிக்கான ஆணை உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில் 96 பயனாளிகளுக்கு ரூ.2.04 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர்.

அரசுப்பொருட்காட்சி தினந்தோறும் மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 10 மணிவரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில் திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், ஆணை–யர் வைத்திநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன் (லால்குடி), ஸ்டாலின்குமார் (துறையூர்), தியாகராஜன் (முசிறி), ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தேவநாதன், மாவட்ட வரு வாய் அலுவலர் அபிராமி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) கங்காதாரணி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ஜெயராமன், மண்டலத்தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“