Advertisment

அமெரிக்கா ஓமியம் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்; ரூ.400 கோடி முதலீட்டில் 500 பேருக்கு வேலை கிடைக்க வாய்ப்பு

அமெரிக்காவில் ஸ்டாலின் முன்னிலையில் ஓமியம் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து; செங்கல்பட்டில் ரூ.400 கோடி முதலீட்டில் 500 பேருக்கு வேலை கிடைக்க வாய்ப்பு

author-image
WebDesk
New Update
stalin ohmium mou

அமெரிக்காவில் ஸ்டாலின் முன்னிலையில் ஓமியம் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.400 கோடி மதிப்பில் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தொழிற்சாலை அமைக்க ஓமியம் நிறுவனம் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்ததில் கையெழுத்திட்டுள்ளது.

Advertisment

உலக நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்களை தமிழகத்தில் தொழில் முதலீடுகளை செய்ய வைப்பதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 27 ஆம் தேதி சென்னையில் இருந்து அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டார்.

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரை சென்றடைந்த ஸ்டாலின், முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்றார். இதனை தொடர்ந்து, பல்வேறு நிறுவனங்களுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. 

இதன்படி, நோக்கியா நிறுவனத்திற்கும், தமிழக அரசிற்கும் இடையே ரூ.450 கோடி முதலீட்டில், 100 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், சிறுசேரி சிப்காட்டில் உலகின் மிகப்பெரிய நிலையான நெட்வொர்க் சோதனை வசதி கொண்ட புதிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதேபோன்று, பேபால் நிறுவனத்திற்கும், தமிழக அரசிற்கும் இடையே 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவிற்கான மேம்பட்ட வளர்ச்சி மையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

தொடர்ந்து, மைக்ரோசிப் நிறுவனத்திற்கும், தமிழக அரசிற்கும் இடையே ரூ.250 கோடி முதலீட்டில் 1,500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சென்னையில் செமிகண்டக்டர் தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதன்மூலம் சென்னை, கோவை, மதுரையில் 4100 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில் ரூ.900 கோடி முதலீடுகளுக்கு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த நிகழ்ச்சியில் தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் அருண் ராய், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் மற்றும் தலைமை செயல் அலுவலர் விஷ்ணு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் அலுவலகங்களுக்கு நேற்று நேரில் சென்று பார்வையிட்டார். இதுபற்றிய புகைப்படங்களையும் ஸ்டாலின் தனது சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்து கொண்டார். மேலும், அமெரிக்காவில் கூகுள் உதவியுடன் செயற்கை நுண்ணறிவில் 20 லட்சம் மாணவ, மாணவிகள் திறன்களை பெற செய்யும் இலக்குடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை நேற்று மேற்கொண்டது. 

இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.400 கோடி மதிப்பில் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தொழிற்சாலை அமைக்க இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. 

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ஓமியம் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டது. ஓமியம் நிறுவனம் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி, புரோட்டான் பரிமாற்ற சவ்வு, எலக்ட்ரோலைசர் அமைப்புகளை உற்பத்தி செய்து வருகிறது.

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சான் பிரான்சிஸ்கோவில் மற்றொரு வெற்றிகரமான நாள்! செங்கல்பட்டு மாவட்டத்தில் ஓமியம் நிறுவனம் மூலம் ரூ.400 கோடி முதலீட்டைப் பெற்றுள்ளோம், 500 வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளோம். இது பசுமை எரிசக்தி உற்பத்திக்கான சுற்றுச்சூழல் அமைப்பை வளர்ப்பதில் ஒரு குறிப்பிடத்தக்க படியைக் குறிக்கிறது மற்றும் ஒரு நிலையான எதிர்காலத்தை எரிபொருளாக்குகிறது!” என்று பதிவிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Mk Stalin America Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment