ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ் (HCL Tech) நிறுவனத்தின் கார்ப்பரேட் சமூகப் பொறுப்புப் பிரிவான HCL அறக்கட்டளை, அதன் முதன்மையான ஊரக வளர்ச்சித் திட்டமான HCL Samuday திட்டத்தை 95 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்துவதற்காக தமிழக அரசுடன் புதன்கிழமை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டது.
இந்தத் திட்டத்திற்காக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புதூர் மற்றும் விளாத்திகுளம் ஒன்றியங்களில் இருந்து 95 கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தமிழக அரசின் அறிவிப்பின்படி, இந்தத் திட்டம் 1,40,000 பயனாளிகளைச் சென்றடையும். நீர் மேலாண்மை, விவசாயம், சுகாதாரம், கல்வி மற்றும் ஊட்டச்சத்து மேலாண்மை ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம், பின்தங்கிய குடும்பங்களுக்கு சிறந்த வருமானம் ஈட்ட உதவும் வகையில் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: ரூ 250 கோடி காண்ட்ராக்ட் 10 நாளில் 2 முறை ரத்து: சென்னை மாநகராட்சியில் நடப்பது என்ன?
HCL Samuday திட்டத்தின் கீழ், ஒவ்வொரு கிராம பஞ்சாயத்துக்கும் தேவையான முன்முயற்சிகளைப் புரிந்து கொள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் 42,000 வீடுகளில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த முன்முயற்சிகள் கிராம மேம்பாட்டுத் திட்டங்களாகத் தொகுக்கப்பட்டன. அவற்றில் சில சமூகங்களின் பங்கேற்பை மேம்படுத்தும் வகையில் ஆரம்ப கட்டத்தில் செயல்படுத்த அடையாளம் காணப்பட்டன.
தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 132 தொடக்கப் பள்ளிகளில் ஸ்மார்ட் போர்டுகளை நிறுவுதல், டிஜிட்டல் கற்றலுக்கு உதவும் வகையில் 20 அங்கன்வாடி மையங்களை உருவாக்குதல், 58 கிராம பஞ்சாயத்துகளில் தொற்றாத நோய்களுக்கான மேம்பட்ட பரிசோதனை மற்றும் மேலாண்மை மற்றும் 100 சுயஉதவிக் குழு பெண்களுக்கு தையல் பயிற்சி அளித்தல் ஆகியவை இந்த முயற்சியின் சில சாதனைகளாகும்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு, சிறப்பு திட்ட அமலாக்கம், வறுமை ஒழிப்பு துறை மற்றும் கிராமப்புற கடன் உள்ளிட்ட துறைகளின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் செயலாளர் பி.அமுதா மற்றும் ஹெச்.சி.எல் அறக்கட்டளையின் திட்ட இயக்குனர் அலோக் வர்மா ஆகியோர் சென்னை தலைமைச் செயலகத்தில் கையெழுத்திட்டனர். தமிழக அரசின் பிற மூத்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil