திருப்போரூரில் உள்ள கந்தசுவாமி கோயில், ஆளவந்தார் நாயக்கர் தொண்டு நிறுவனங்களின் பெரும் பகுதி நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள நிலம் நான்கு மாதங்களுக்குள் மீட்கப்படும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது.
ஜனவரி 21, 2022 அன்று, கந்தசுவாமி கோயில் மற்றும் ஆளவந்தார் நாயக்கர் தொண்டு நிறுவனத்திற்குச் சொந்தமான நிலங்களை மீட்கவும், அனைத்து ஆக்கிரமிப்பாளர்களையும் அகற்றவும், இந்து சமய அறநிலையத் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்து சமய அறநிலையத் துறை இந்த உத்தரவை செயல்படுத்தவில்லை என்று வழக்கறிஞர் பி.ஜகநாத் நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்து சமய அறநிலையத் துறைக்கான சிறப்பு அரசு வழக்கறிஞரான அருண் நடராஜன், நீதிமன்ற உத்தரவின்படி, ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்பதற்கான விவரங்கள் அடங்கிய நிலை அறிக்கையை சமர்பித்தார்.
இந்து சமய அறநிலையத் துறை மொத்தம் 184 ஆக்கிரமிப்பாளர்களை அடையாளம் கண்டுள்ளதாகவும், மேலும் 19 ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக வெளியேற்றும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 40 ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக சமீபத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், அவை நான்கு மாதங்களுக்குள் தீர்க்கப்படும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் ஆக்கிரமிப்புகளை தவிர்க்க, துறை சார்பில், 10.44 கோடி ரூபாய் மதிப்பில் சுவர்கள் கட்ட டெண்டர் விடப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.
வழக்கறிஞரின் நீதிமன்ற அவமதிப்பு மனுவை எதிர்த்த இந்து சமய அறநிலையத் துறை நீதிமன்ற உத்தரவின்படி வெளியேற்றும் செயல்முறை தொடங்கப்பட்டுள்ளதாகவும், நீதிமன்ற உத்தரவை மீறும் நோக்கம் இல்லை என்றும் சமர்ப்பித்தது.
இதனையடுத்து, நிலை அறிக்கைக்கு எதிர் மனு தாக்கல் செய்யுமாறு மனுதாரருக்கு பெஞ்ச் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“