தமிழகத்தில் வரும் 28 மற்றும் 29-ந் தேதிகளில் நடைபெறும் போராட்டத்தில் அரசு ஊழியர்கள் பங்கேற்றால் அவர்களுக்கு சம்பளம் தரப்படமாட்டாது என்று தமிழக அரசின் தலைச்செயலாளர் இறையன்பு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
இம்மாதம் 28 மற்றும் 29-ந் தேதிகளில் பல கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக சில மத்திய வர்த்தக சங்கங்கள் அறிவித்துள்ளன. இந்த போரட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த அக்கீகரிக்கப்படாத சங்கங்களின் உறுப்பினர்கள் பங்கேற்க இருப்பதாக அரசுக்கு தகவல் வந்துள்ளது.
இந்த சூழ்நிலையில், அரசு ஊழியர்கள் யாரும் வேலை நிறுத்த போராட்டத்திலோ அல்லது வேலை நிறுத்தம் செய்வதாக அச்சுறுத்தலோ செய்வது அல்லது ஆர்ப்பாட்டம் போன்ற எதிர்ப்பு செயல்பாடுகளில் பங்கேற்று, அதன் மூலம் அரசு அலுவலகங்களின் இயல்பான செயல்பாட்டை பாதிப்படையச் செய்தால் அது தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஒழுங்கு விதிகளை மீறியதாக அமைந்துவிடும்.
எனவே இதுகுறித்து உங்களின் பணியாளர்களுக்கு தகுந்த அறிவுரையை வழங்குங்கள். பணியாளர்கள் எவராவது அலுவலகத்திற்கு வராமல் அந்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததாக தெரியவந்தால், அவர் அலுவலகத்திற்கு வராமலிருந்ததை அங்கீகாரமற்றதாக கருத வேண்டும்.
அந்த நாளை, “பணியில்லை, சம்பளமில்லை” என்ற கொள்கையின் அடிப்படையில் அந்த நாளுக்கான ஊதியத்தை வழங்கக் கூடாது. போராட்டம் அறிவிக்கப்பட்ட நாட்களில் மருத்துவ விடுப்பு தவிர தற்செயல் விடுப்பு உள்ளிட்ட எந்தவித விடுப்பிற்கும் அனுமதி அளிக்கக் கூடாது.
ஒவ்வொரு துறைத் தலைவர்களும் அவர்களின் நிர்வாகத்தின் கீழ் வரும் அனைத்து அலுவலகத்தில் உள்ள பணியாளர்களின் வருகை குறித்த தொகுப்பு அறிக்கையை 28 மற்றும் 29-ந்தேதி காலை 10.15 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
தலைமைச் செயலகத்தில் உள்ள அதிகாரிகள் இதுபோன்ற அறிக்கையை மனிதவள மேம்பாட்டுத்துறைக்கு அந்த நாட்களில் காலை 10.30 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.