தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில், ஏற்கனவே சில கட்டுப்பாடுகள் ஏப்ரல் 18 ஆம் தேதி அறிவிக்கப்பட்டு தற்போது அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் கொரோனா பரவல் தமிழகத்தில் குறையவில்லை. கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு 10000ஐ தாண்டி வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் சிகிச்சைப் பெறுவோர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 7 மடங்கு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளாக தமிழக அரசு மேலும் சில கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள் வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
அதன்படி ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஊரடங்கு ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.
அனைத்து திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், கேளிக்கைக் கூடங்கள், மதுபான பார்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள் இயங்க அனுமதி இல்லை.
பெரிய கடைகள், வணிக வளாகங்கள் இயங்க அனுமதி இல்லை. மளிகை கடை மற்றும் காய்கறி கடைகள் 50% வாடிக்கையாளர்களுடன் மட்டும் செயல்பட அனுமதி உண்டு. குளிர் சாதன வசதியின்றி டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ் இயங்க அனுமதி. இருப்பினும் மால்களில் உள்ள டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ் இயங்க அனுமதி இல்லை.
அனைத்து மாநகராட்சிகள் மற்றும் அனைத்து நகராட்சிகளில் அழகு நிலையங்கள், சலூன்கள் இயங்க அனுமதி இல்லை.
அனைத்து உணவகங்கள் மற்றும் டீக்கடைகளில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி உண்டு. உட்கார்ந்து சாப்பிட அனுமதி இல்லை.
அனைத்து மின் வணிக சேவைகள் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே செயல்பட வேண்டும்.
அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. ஆனால் பொதுமக்கள் பங்கேற்பு இல்லாமல் உரிய நடைமுறைகளை பின்பற்றி குடமுழுக்கு மட்டும் நடத்த அனுமதி.
திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்கு மேல் பங்கேற்க கூடாது.
இறுதி ஊர்வலம் மற்றும் அதைச் சார்ந்த சடங்குகளில் 25 பேருக்கு மேல் பங்கேற்க அனுமதி இல்லை
கோல்ஃப், டென்னிஸ் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு சங்கங்கள் செயல்பட அனுமதி இல்லை. எனினும், சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளுக்கு மட்டும் அனுமதி உண்டு
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் குறைந்தபட்சம் 50% பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவது கட்டாயமாகிறது. ஏற்கனவே 50% பணியாளர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிய அறிவுறுத்தப்பட்ட நிலையில் தற்போது கட்டாயமாகியுள்ளது.
புதுச்சேரி தவிர்த்து பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் நபர்களுக்கு இ-பதிவு கட்டாயமாகிறது.
தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் இருக்கைகளில் மட்டுமே பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி உண்டு. பேருந்துகளில் நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை.
வாடகை டாக்ஸி மற்றும் ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து 2 பேர் மட்டுமே பயணிக்கலாம்.
இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும்.
மேலும் முகக் கவசம் அணிதல், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.