நாடு முழுவதும் கோடை வெயில் தொடங்கி விட்டது. வெயில் மற்றும் வெப்ப அலை வீசி வருகிறது. குறிப்பாக பகல் நேரத்தில் அனல் காற்று வீசுகிறது. வாகனம் ஓட்டுவது சவாலாக உள்ளது. தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே கடுமையான வெயில் நிலவுகிறது. வரும் நாட்களில் வெப்ப நிலை மேலும் அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டி வெப்ப நிலை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக நேற்று ஈரோட்டில் 100.7 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. சேலத்தில் 100.5, நாமக்கல்லில் 100.4 என்ற அளவில் வெப்பம் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் வரும் நாட்களில் வெப்ப அலையை எதிர்கொள்ள சுகாதாரத் துறை சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. தேசிய நோய் தடுப்பு மையம் மற்றும் மத்திய சுகாதாரத்துறையின் அறிவுரைப்படி, தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர்களுக்கும் வழிகாட்டு நெறிமுறைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பொதுமக்கள் மதியம் 12 மணி முதல் மாலை 3 வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். குழந்தைகள், வயதானோர், கர்ப்பிணிகள் முடிந்தவரை வீடுகளுக்குள் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒருவேளை வெயிலில் செல்ல வேண்டியிருந்தால் குடை, உடலை முழுவதுமாய் மறைக்கும் வகையில் பருத்தி ஆடைகளை பயன்படுத்த வேண்டும்.
பழங்கள் அதிகம் டுத்துக் கொள்ள வேண்டும், அதிக தண்ணீர் பருக வேண்டும். உடல் சூடு, தோலில் எரிச்சல், வாந்தி, மயக்கம், தலைவலி உள்ளிட்டவை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
அதீத வெப்பத்தால் ஏற்படும் பக்கவாதத்திற்கு தேவையான சிகிச்சைகள் வழங்க மருத்துவ கட்டமைப்புகளை தயார் நிலையில் வைக்குமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தல். ஓ.ஆர்.எஸ் பாக்கெட்கள், ஐவி திரவங்கள், ஜஸ் பேக்குகள் மற்றும் அத்தியாவசிய மருந்துகள் போதுமான அளவு அனைத்து மருத்துவமனைகளிலும் கையிருப்பில் வைக்க வேண்டும். மின்சார வாரியத்துடன் ஆலோசனை நடத்தி குளிரூட்டும் கருவிகள், இதர சாதனங்களுக்கு தடையில்லா மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil