இன்புளுயன்சா காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில், தமிழக சுகாதாரத்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் குறிப்பாக இன்புளுயன்சா தொடர்பான வழிக்காட்டு நெறிமுறைகளை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. ’மருத்துவமனை ஊழியர்கள் ப்ளூ காய்ச்சல் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும். கர்ப்பிணிகள் மற்றும் இணை நோய்கள் உள்ளவர்களும் ப்ளூ தடுப்பூசிகளை செலுத்திகொள்ளலாம். 65 வயதுக்கு மேற்பட்டவர்களும், 8 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளும் ப்ளூ தடுப்பூசியை செலுத்திகொள்வது சரியாக இருக்கும். பாதிக்கப்பட்ட நோயாளிகள் மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டு, தீவிர மூச்சு திணறல் ஏற்படுவோருக்கு மட்டும் ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை செய்ய வேண்டும்.
மூச்சுதிணறல், நெஞ்சுவலி போன்ற தீவிர பாதிப்பு இல்லாதவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளலாம். ப்ளு பாதிப்பு ஏற்பட்டவர்கள் 7 நாட்களுக்கு வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். காய்ச்சல் உள்ளவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும், அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். வீட்டுத் தனிமையில் இருப்பவர்கள் 24 மணி நேரமும் 104 மற்றும் 108 எண்களை அழைத்து மருத்துவ ஆலோசனை பெறலாம். முகக் கவசம் அணி வது, அடிக்கடி கை கழுவுவது போன்ற விதிமுறைகளை கடை பிடிக்க வேண்டும்’ என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது