Advertisment

செவிலியர் பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும்? மா.சுப்பிரமணியன் தகவல்

முதல்வர் காப்பீடு திட்டத்தில் 1900 மருத்துவமனைகளுக்கு மேல், சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எந்த மருத்துவமனையிலாவது சிகிச்சை அளிக்க மறுப்பதாக புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

author-image
WebDesk
New Update
ma subramanian erode

தமிழகத்தில் போதைப் பொருட்களை விற்பனை செய்ததாக 17,481 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டதோடு, 33,28,13,600 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Advertisment

ஈரோடு அரசு மருத்துவமனையில் கட்டண படுக்கை அறை சிகிச்சை வசதியை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் முத்துச்சாமி தொடங்கி வைத்தனர். பின்னர், மருத்துவனையில் ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செய்தியாளர்களிடம் கூறியதாவது: ”அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில் கட்டண படுக்கை அறைகள் ஏற்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பட்ஜெட்டில் 16 மாவட்டங்களில், இது போன்ற கட்டண படுக்கை அறை வசதி ஏற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

கோவை, மதுரை, சேலம் ஆகிய மூன்று மாவட்டங்களில் இந்த கட்டண படுக்கை அறைத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஈரோடு அரசு மருத்துவமனையில் கட்டணம் செலுத்தி மருத்துவச் சிகிச்சை பெறும் வகையில், 20 படுக்கை அறைகள் இன்று திறக்கப்பட்டுள்ளன.

இந்த கட்டண அறைகள் குளிர்சாதன வசதியுடன், தனி கழிப்பறை, குளியலறை வசதி, தொலைக்காட்சி பெட்டி போன்ற வசதிகள் இருக்கும். ஈரோடு படுக்கை அறைக்கான கட்டணம் குறித்து, ஓரிரு நாளில் அதிகாரிகள் தெரிவிப்பார்கள். ஈரோடு அரசு மருத்துவமனையில் கேத் லேப் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் ஈரோடு, ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, திருப்பத்தூர் ஆகிய 4 மாவட்டங்களில் சாயக்கழிவு, தோல் தொழிற்சாலை, ரப்பர் உற்பத்தி கழிவுகளால் புற்றுநோய் பாதிப்பு அதிகம் இருப்பதாக சொல்லப்பட்டது. இந்த 4 மாவட்டங்களில், 4.19 லட்சம் பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், 176 பேருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதில், ஈரோடு மாவட்டத்தில் 3.29 லட்சம் பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. 1.27 லட்சம் பேரை பரிசோதனை செய்ததில், 3039 பேர் புற்றுநோய் இருக்கலாம் என கண்டறியப்பட்டது. இதில், 50 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இவர்களுக்கு தொடர் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் புற்றுநோய் பாதிப்பு குறித்த பரிசோதனைகள் நடத்தப்படும்.

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் போதைப் பொருட்கள் நடமாட்டத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கையில், இதுவரை 8,66,619 கடைகளில் ஆய்வு செய்யப்பட்டு, 32,404 கடைகளில் குட்கா பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அந்த கடைகளில் இருந்து ரூ.20,91,19,468 ரூபாய் மதிப்பிலான 2,86,681 கிலோ எடையுள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், போதைப் பொருட்களை விற்பனை செய்ததாக 17,481 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டதோடு, 33,28,13,600 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

கடந்த 4 மாதங்களுக்கு முன்னால், 1021 மருத்துவப் பணியிடங்கள், 927 செவிலியர் பணியிடங்கள் வெளிப்படைத்தன்மையுடன் நிரப்பப்பட்டன. 986 மருந்தாளுநர் பணியிடங்களை நிரப்ப கவுன்சிலிங் நாளை நடக்கவுள்ளது. 2253 மருத்துவர் பணியிடங்களுக்கு ஜூலை 15-ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதற்கான கேள்விகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. தேர்வுக்கு பிறகு அவர்கள் கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படுவார்கள். 1066 சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் 2250 சுகாதார செவிலியர்கள் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக வழக்குகள் உள்ளன. வழக்கு முடிந்தவுடன் அந்த பணியிடங்கள் நிரப்பப்படும். ஈரோடு அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் போதுமான அளவு உள்ளனர். ஒப்பந்த அடிப்படையில் 137 பேர் பணியில் உள்ளனர். இவர்களை கூடுதலாக பணியில் அமர்த்தவும், அவர்களுக்கு உரிய சம்பளம் வழங்கவும் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பார்.

முதல்வர் காப்பீடு திட்டத்தில் 1900 மருத்துவமனைகளுக்கு மேல், சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எந்த மருத்துவமனையிலாவது சிகிச்சை அளிக்க மறுப்பதாக புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

குழந்தைகள் கடத்தப்படுவதைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எல்லா மருத்துவமனைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. நாமக்கல்லில் கிட்னி விற்பனை தொடர்பான புகாரில் சிக்கியவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கிட்னி விற்பனை தொடர்பான தகவல் இருந்தால் ரகசியமாக தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.” இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Ma Subramanian Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment