தமிழகத்தில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூல் செய்வதாக புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார்.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.8.80 கோடி மதிப்பீட்டில் தீக்காய பிரிவில் அதிநவீன மருத்துவ உபகரணங்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் புதன்கிழமை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ”தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் வந்துள்ளன. ஒரு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் தலைமையில் சுகாதார செயலாளர், இரண்டு முன்னாள் மாநில அரசு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், மருத்துவக் கல்வி இயக்குனர் மற்றும் பட்டய கணக்காளர் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக கட்டண நிர்ணய குழுவில் இருக்கிறார்கள். இந்த கட்டண நிர்ணய குழுதான் ஆண்டுதோறும் மருத்துவக் கல்வி மாணவர்களின் கட்டணங்களை நிர்ணயிக்கிறது.
இந்நிலையில் ரூ.3.5 லட்சம் வரை அதிக கட்டணம் வசூலிக்கிறார்கள் என்பது போல ஒரு செய்தி வந்திருக்கிறது. இந்த செய்தியினை பார்த்தவுடன் உயர் அலுவலர்களுடன் கலந்து பேசி, இது சம்மந்தமான புகார்கள் மாணவர்கள் சார்பாகவோ அல்லது பெற்றோர்கள் சார்பாகவோ வந்தால் கமிட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உரிய விசாரணை நடத்தப்படும். கட்டணங்கள் வசூலிப்பது தொடர்பாக இந்த ஆண்டு 2 புகார்கள் வந்துள்ளன. அதனையும் விசாரித்து நடவடிக்கை எடுப்போம். பாதிக்கப்பட்டவர் புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று கூறினார்.
ஜூலை மாதம், நீதிபதி ஆர்.பொங்கியப்பன் தலைமையிலான சுயநிதி தொழில்முறைக் கல்லூரிகளுக்கான கட்டண நிர்ணயக் குழு, எம்.பி.பி.எஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான கல்விக் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என்று பரிந்துரைத்தது. சுயநிதிக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் மூலம் சேரும் மாணவர்களுக்கு கல்வி மற்றும் சிறப்புக் கட்டணமாக ரூ.4.50 லட்சமும், மேனேஜ்மெண்ட் ஒதுக்கீட்டின் மூலம் சேரும் மாணவர்களுக்கு ரூ.13.5 லட்சமும், என்.ஆர்.ஐ ஒதுக்கீட்டிற்கு ரூ.24.5 லட்சமும் கட்டணமாக கமிட்டி நிர்ணயித்துள்ளது.
”தனியார் மருத்துவப் பல்கலைக் கழகங்களில் கட்டணம் அதிகம். தனியார் மருத்துவக் கல்லூரிகள் இந்த ஆண்டு கட்டணத்தை உயர்த்தக் கோரின. ஆனால் கமிட்டி மறுத்துவிட்டது. நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் விடுதி, மெஸ் மற்றும் போக்குவரத்து கட்டணம் இல்லை. இதற்கு கல்லூரிகள் தனித்தனியாக கட்டணம் வசூலிக்கலாம்," என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
”இருப்பினும், கல்லூரிகளால் அதிக கட்டணம் வசூலிக்க முடியாது. நியாயமற்ற குற்றச்சாட்டுகள் இருந்தால், பெற்றோர்கள் தேவையான சான்றுகள் மற்றும் ஆவணங்களுடன் புகார் அளிக்கலாம். கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்க குழுவை வலியுறுத்துவோம்," என்று அமைச்சர் கூறினார்.
இதற்கிடையில், நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் ரூ. 4.5 லட்சத்தை விட கூடுதலாக ரூ. 4 லட்சம் செலுத்தவும், அதுவும் ரொக்கமாக இருக்க வேண்டும் என்று கூறி ரசீது தர மறுத்ததாகவும் புகார் எழுந்துள்ளது. மேலும் சென்னையில் உள்ள ஒரு கல்லூரி, கூடுதல் கட்டணமாக ரூ.3.50 லட்சம் வசூலித்ததாகவும் புகார் எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“