கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி ஆகும். இதன் மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளைநிலம் பாசனம் பெறுகிறது. இந்த ஏரி கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பகுதிகளான காட்டுமன்னார்கோவில், புவனகிரி, சிதம்பரம் வட்டப்பகுதிகளில் உள்ள விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காத்து வருகிறது.
ஏரிக்கு அணைக்கரையில் உள்ள கீழணையில் இருந்து வடவாறு வழியாக காவிரி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு ஏரி நிரப்பப்படும். இதன் முழு கொள்ளளவு 47.50 அடி ஆகும். ஏரியில் இருந்து தொடர்ந்து சென்னை குடிநீருக்கும் தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. தற்போது ஏரியின் நீர் பிடிப்புப் பகுதிகளான ஜெயங்கொண்டம், அரியலூர், ஆண்டிமடம் மீன்சுருட்டி, ஸ்ரீமுஷ்ணம் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.
இந்த மழை தண்ணீர் செங்கால் ஓடை மற்றும் பல்வேறு காட்டாறுகள் மூலம் வீராணம் ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. கருவாட்டு ஓடை தண்ணீர் வடவாற்றில் கலந்து ஏரிக்கு வருகிறது. கீழணையில் இருந்து ஏரிக்கு விநாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர் வடவாறு வழியாக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதனால் ஏரியின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இன்னும் ஓரிருநாளில் ஏரி முழு கொள்ளளவை எட்டி விடும்.
இதனிடையே இன்று ஏரியின் நீர் மட்டம் 45.65 கன அடியாக உள்ளது. சென்னைக்கு விநாடிக்கு 67 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. விவசாத்துக்காக விநாடிக்கு 120 கன அடி தண்ணீர் பாசன மதகுகளில் திறந்து விடப்பட்டுள்ளது. 9 அடி தண்ணீர் தேக்கக்கூடிய கீழணையில் தற்போது 8.5 அடி தண்ணீர் உள்ளது. கீழணைக்கு விநாடிக்கு 4 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கொள்ளிடம் ஆற்றில் கீழணையில் இருந்து வினாடிக்கு 4 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
வீராணம் ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதையடுத்து, சிதம்பரம் நீர் வளத்துறை செயற்பொறியாளர் காந்தரூபன் தலைமையில் உதவி செயற்பொறியாளர்கள் அணைக்கரை கொளஞ்சிநாதன், சிதம்பரம் விஜயகுமார் மற்றும் உதவிப் பொறியாளர்கள், நீர் வளத்துறை பணியாளர்கள் கொண்ட குழுவினர் கீழணை பகுதி, வடவாறு, வீராணம் ஏரி கரைப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“