scorecardresearch

தொடர் மழை எதிரொலி..  கோவையில் வெள்ளத்தில் மூழ்கிய தரைப்பாலங்கள்

சித்திரைச்சாவடி அணை – சுண்ணாம்பு கல்வாய் – உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

தொடர் மழை எதிரொலி..  கோவையில் வெள்ளத்தில் மூழ்கிய தரைப்பாலங்கள்

ரஹ்மான் – கோவை

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ள நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதில் கோவை மாவட்டத்தில் நகர் பகுதிகளில் மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் மலையை ஒட்டி உள்ள பகுதிகளில் பல்வேறு இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது. இதன் காரணமாக நொய்யல் ஆற்றுக்கு நீர் வரத்து அதிகரித்து  வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சித்திரைச்சாவடி அணை –  சுண்ணாம்பு கல்வாய் – உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. மேலும் கோவை குற்றாலம் கவியருவிகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வெள்ளலூர் – சிங்காநல்லூர் சாலையில் அமைக்கப்பட்டு இருந்த தரைப்பாலம் இரண்டாவது முறையாக வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

நஞ்சுண்டாபுரம் – வெள்ளலூர் சாலையில் உள்ள தரைப்பாலம் சேதமடைந்துள்ளது. கோவை மாநகர பகுதிகளில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. மேலும் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக கனமழை கொட்டி தீர்த்து வருவதர் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் சின்னக்கல்லார் மற்றும் சோலையார் பகுதிகளில் 9.6 செ.மீ மழையும், வால்பாறை பிஏபி பகுதியில் 9.2 செ.மீ. மழையும், வால்பாறை தாலுக்காவில் 8.9 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. கனமழை காரணமான நீர்வரத்து அதிகரித்துள்ளதால் 165 அடி கொள்ளளவு கொண்ட சோலையார் அணையில் 162.55 அடியும், 72 அடி கொள்ளளவு கொண்ட பரம்பிக்குளம் அணையில் 68.51 அடியும், 120 அடி கொள்ளளவு கொண்ட ஆழியார் அணையில் 117.90 அடியும் நீர்மட்டம் உள்ளது.

நீலகிரியில் தொடர் கனமழை

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ள நிலையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர், ஊட்டி, குந்தா ஆகிய 4 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அம்ரித் உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக தெப்பக்காடு பகுதியில் உள்ள தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu heavy rain flooded foodbridges in coimbatore