கோவையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற சிறு, குறு நடுத்தர தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் பங்கேற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில், பங்கேற்ற அன்னப்பூர்ணா உணவக நிறுவனர், உணவுப்பொருட்களுக்கு விதிக்கப்படும் ஜி.எஸ்.டி வரி விதிப்பு குறித்து பேசியிருந்தார். இவர் பேசியது இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், ஜி.எஸ்.டி வரி விதிப்பு குறித்து விமர்சனங்களும் எழுந்தது.
இதனிடையே அடுத்த சில மணி நேரங்களில், அன்னப்பூர்ணா உணவக நிறுவனர் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து மன்னிப்பு கோரியதாக ஒரு வீடியோ பதிவு வெளியானது. இந்த பதிவை பார்த்த அரசியல் பிரபலங்கள், நெட்டிசன்கள் என பலரும் கடுமையாக விமர்சிக்க தொடங்கினர். மக்களின் கருத்துக்களை கேட்டுக்கொள்ளாமல், கருத்து சொன்னவரை மிரட்டி மன்னிப்பு கேட்க வைப்பது தவறானது என்று கடுமையான விமர்சனங்களை கூறியிருந்தனர்.
கோவை அன்னபூர்ணா உணவக நிர்வாகம் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில், கோவையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறு, குறு நடுத்தர தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் பங்கேற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் எங்களது நிர்வாக இயக்குனர் சீனிவாசன் பங்கேற்று உணவகம், பேக்கரி தொழிலில் உள்ள ஜி.எஸ்.டி பிரச்னை குறித்த பேசினார்.அவரது உரை அடுத்த நாள் வைரலாக பரவியது.
தனது உரையை தவறாக புரிந்து கொள்ளவோ தவறான தோற்றத்தை ஏற்படுத்தி விடக்கூடாது என்ற விருப்பத்தின் பேரில் சீனிவாசன் -நிதி அமைச்சரை தனிப்பட்ட ரீதியில் சந்தித்து விளக்கமளித்தார். இந்த தனிப்பட்ட சந்திப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதால் தவறான புரிதல்களையும் குழப்பங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோ வெளியானதற்கு தமிழக பாஜக மன்னிப்பு கோரியதுடன் - இந்த வீடியோவை எடுத்த நபர் மீதும் நடவடிக்கை எடுத்துள்ளது. தொழில் துறையினர் மற்றும் வர்த்தகர்களின் கருத்துக்களை அறிய நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த மத்திய நிதி அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.இத்துடன் இந்த விவகாரததில் தேவையற்ற யூகங்கள், தவறான அரசியல் புரிதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறோம்.
இதை அனைத்து தரப்பினரும் புரிந்து கொண்டு இந்த விவகாரத்தை தொடராமல் இத்துடன் முடித்துக் கொள்வார்கள் எனவும் நம்புகிறோம். இந்தப் பிரச்சனையை இத்துடன் முடித்துக் கொள்வோம். தேவையற்ற விவாதத்தையும் குழப்பத்தையும் தவிர்ப்போம். அரசியலில் தவறான புரிதல்களுக்கு ஓய்வு கொடுக்க விரும்புகிறோம். எனவே இதனை இத்துடன் முடித்துக் கொள்ள விரும்புகிறோம்.
எங்களுக்கு ஆதரவும் ஊக்குவம் அளித்த எங்கள் விசுவாசமான வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக அன்னபூர்ணா நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“