தமிழ்நாடு அரசு அண்மையில் ஒரு பெரிய நிர்வாக மாற்றத்தை அறிவித்தது. பல்வேறு துறைகளின் செயலர்கள் உட்பட 55 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இந்த மாற்றங்களில் திருப்பூர், பெரம்பலூர், நாமக்கல், விருதுநகர் உள்ளிட்ட 9 மாவட்டங்களின் ஆட்சியர்களும், 7 மாநகராட்சி ஆணையர்களும் அடங்குவர்.
அந்தவகையில், திருப்பூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த கிறிஸ்துராஜ் சுற்றுலாத்துறை இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவரது பிரிவு உபச்சார விழா நேற்று நடந்தது. இதில், அரசு அலுவலர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
விழாவில், ஆட்சியர் கிறிஸ்துராஜூக்கு தங்களின் கைகளால் தொடுக்கப்பட்ட பாசிமணி மாலையை அணிவித்து நரிக்குறவ மக்கள் பாசத்தை பொழிந்தனர். இந்த நிகழ்வால் விழா அரங்கமே உணர்ச்சிவசத்தில் ஆழ்ந்தது.
அதேபோல சென்னைக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்ட நாமக்கல் ஆட்சியர் உமாவுக்கு, திருநங்கைகள் திரண்டு வந்து நெற்றியில் திருநீறு பூசி கண்ணீர் மல்க வழியனுப்பி வைத்தனர். இந்த நிகழ்வு அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க வைத்தது.
ஆட்சியர் உமாவும், இந்த அன்புமழையால் பெரிதும் உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார். சமூகத்தில் புறக்கணிக்கப்படும் நிலையில் இருக்கும் திருநங்கை சமூகத்தின் நம்பிக்கையைப் பெற்று, அவர்களின் அன்புக்குப் பாத்திரமான ஒரு அதிகாரியாக உமா திகழ்ந்தது, அவரது மக்கள் பணிக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகும்.
இந்த இரண்டு நிகழ்வுகளும், ஐஏஎஸ் அதிகாரிகள் வெறும் அரசு ஊழியர்கள் மட்டுமல்ல, அவர்கள் மக்கள் நலனுக்காக உழைக்கும்போது, அவர்களுக்குக் கிடைக்கும் மக்கள் ஆதரவும் அன்பும் அளப்பரியது என்பதை நிரூபிக்கின்றன.
இந்த வீடியோக்கள் இப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது.