தொழில் அனுமதி வழங்குவதில் தமிழகம் கடைசி இடம் – ராமதாஸ்

தமிழகத்தில் புதிதாக தொழில் தொடங்க எவரேனும் முன்வந்தால், அவர் முதலீடு செய்ய முன்வரும் தொகையில் குறைந்தது 40 விழுக்காட்டை ஆட்சியாளர்களுக்கு கையூட்டாக வழங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகின்றனர்

தமிழகத்தில் தொழில் தொடங்குவது குறித்து ராமதாஸ்
தமிழகத்தில் தொழில் தொடங்குவது குறித்து ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் தொழில் திட்டங்களுக்கான உரிமம் பெறுவதற்கும், கட்டுமான அனுமதி பெறுவதற்கும் தேவையில்லாத கால தாமதம் செய்யப்படுவதாகவும், இந்த விஷயத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு கடைசி இடத்தில் இருப்பதாகவும் தேசிய அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. தமிழக அரசு நிர்வாகத்தில் நிலவும் ஊழல் தான் இதற்கு காரணமாகும். இந்தப் போக்கு கண்டிக்கத்தக்கது.

இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கு ஏற்ற மாநிலங்களாக திகழ்பவை எவை? என்பதைக் கண்டறியும் நோக்கத்துடன் தில்லியைத் தலைமையிடமாகக் கொண்ட ‘பொருளாதார வளர்ச்சி நிறுவனம்’ அண்மையில் ஆய்வு ஒன்றை நடத்தியது. மொத்தம் 30 பக்கங்கள் கொண்ட ஆய்வறிக்கையில் தொழில் அனுமதி மற்றும் கட்டிட அனுமதி அளிப்பதில் தமிழகம் மிக மோசமாக செயல்படுவதாக குற்றஞ்சாற்றப்பட்டுள்ளது.

தொழில் மற்றும் கட்டிட அனுமதி 15 நாட்களுக்குள் வழங்கப்பட்டால் அது சிறப்பானது என்றும், 15 முதல் 45 நாட்களுக்குள் அனுமதி வழங்கப்பட்டால் மிதமானதாகவும், அனுமதி வழங்க 45 நாட்களுக்கு மேல் ஆனால் மோசமானதாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொழில் அனுமதிக்காக விண்ணப்பிக்கும் நிறுவனங்களில் 21% நிறுவனங்களுக்கு மட்டும் தான் 15 நாட்களுக்குள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 52% நிறுவனங்களுக்கு 45 நாட்கள் அவகாசத்திலும், 27% நிறுவனங்களுக்கு 45 நாட்களுக்கு பிறகும் தான் அனுமதி வழங்கப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. கட்டுமான அனுமதியைப் பொறுத்தவரை 5% நிறுவனங்களுக்கு மட்டுமே 15 நாட்களுக்குள் அனுமதி தரப்படுகிறது. 47% நிறுவனங்களுக்கு 45 நாட்களுக்கு முன்பாகவும், 48% நிறுவனங்களுக்கு 48 நாட்களுக்கும் பிறது தான் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் ஆய்வுகளின் முடிவுகளில் தெரிவிக்கப்பட்ட்டுள்ளன.

அதே நேரத்தில் இந்தியாவின் மற்ற மாநிலங்களில் 30 நாட்களுக்குள்ளாகவே அனைவருக்கும் இந்த அனுமதி வழங்கப்படுகிறது. ஆந்திரா மற்றும் ஒதிஷாவில் விண்ணப்பித்த ஒன்று முதல் மூன்று நாட்களில் தொழில் அனுமதி வழங்கப்படுவதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசம், கேரளம் ஆகிய மாநிலங்களும் தொழில் அனுமதி வழங்குவதில் பின்தங்கியுள்ள போதிலும், அந்த மாநிலங்களை விட தமிழ்நாடு தான் அனைத்து அம்சங்களிலும் மிகவும் பின்தங்கியுள்ளது. உலகப்புகழ் பெற்ற பொருளாதார வல்லுனரும், இந்தியாவின் முன்னாள் பிரதமருமான மன்மோகன்சிங் தான் இந்த ஆய்வை நடத்திய பொருளாதார வளர்ச்சி நிறுவனத்தின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

தொழில் அனுமதி வழங்கும் விஷயத்தில் தமிழகம் எவ்வளவு மோசமாக செயல்படுகிறது என்பதற்கு அந்த நிறுவனம் அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள ஒரு வாசகம் தான் மிகவும் முக்கியமானதாகும். ‘‘ தொழில் அனுமதி மற்றும் கட்டுமான அனுமதி வழங்குவதில் பெரும்பான்மையான மாநிலங்களின் செயல்பாடுகளில் மோசமான செயல்பாடுகளைவிட சிறப்பாக செயல்பாடுகள் தான் மேலோங்கியுள்ளன. ஆனால், தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் தான் சிறப்பான செயல்பாடுகளை விட மோசமான செயல்பாடுகள் மேலோங்கியுள்ளன’’ என்பது தான் அந்த வாசகமாகும். தமிழகத்தில் தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்கான சூழலை உருவாக்க தமிழக ஆட்சியாளர்கள் விரும்பவில்லை என்பதையே இது காட்டுகிறது.

தமிழ்நாட்டில் தொழில் அனுமதிகள் ஒற்றைச் சாளர முறையில் 30 நாட்களுக்குள் வழங்கப்படுவதாக தமிழக அரசு கூறி வருகிறது. ஆனால், நடைமுறை யதார்த்தம் அப்படிப்பட்டதாக இல்லை. தமிழகத்தில் தொழில் திட்டங்களுக்கான அனுமதி பெறுவது என்பது அதிக காலம் பிடிக்கும் ஒன்றாகவே உள்ளது. இதற்கான காரணம் வெளிப்படையானது. அது கையூட்டு தான். தமிழகத்தில் புதிதாக தொழில் தொடங்க எவரேனும் முன்வந்தால், அவர் முதலீடு செய்ய முன்வரும் தொகையில் குறைந்தது 40 விழுக்காட்டை ஆட்சியாளர்களுக்கு கையூட்டாக வழங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இதையேற்று கையூட்டு வழங்கும் நிறுவனங்களுக்கு உடனடியாக அனுமதி வழங்கப்படும்; மற்றவர்களுக்கு அனுமதி கிடைக்காது என்பது தான் உண்மை. பாதிக்கப்பட்ட பல தொழிலதிபர்கள் இதை உறுதி செய்துள்ளனர்.

தமிழக அரசு நிர்வாகத்தில் நிலவும் ஊழல்கள் தான் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி தடை படுவதற்கு காரணமாகும். கடந்த சில ஆண்டுகளில் மட்டும் தமிழகத்திற்கு கிடைத்திருக்க வேண்டிய ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் கூடுதலான முதலீடுகள் ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்றுள்ளன. இத்தகைய சூழலில் தான் தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான உலக முதலீட்டாளர்கள் மாநாடு இரண்டாவது முறையாக வரும் ஜனவரி மாதம் நடைபெறும் என்று அரசு அறிவித்துள்ளது. அரசு நிர்வாகத்தில் ஊழலை ஒழிக்காமல் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்துவதால் எந்த பயனும் ஏற்படாது. 2015&ஆம் ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு எவ்வாறு தோல்வியடைந்ததோ, அதேபோல் இரண்டாவது முதலீட்டாளர்கள் மாநாடும் தோல்வியடைவது உறுதி.

எனவே, தொழில் தொடங்க அனுமதி அளிப்பதில் நடைபெறும் ஊழலை ஒழிக்க ஆட்சியாளர்கள் முன்வர வேண்டும். நேர்மையான அதிகாரிகள் குழுவை அமைத்து அதன் மூலம் தொழில் மற்றும் கட்டுமான அனுமதி வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும். அதுமட்டுமின்றி, தமிழகத்தில் கடந்த 7 ஆண்டுகளில் தொழில் அனுமதி வழங்குவதற்காக வந்த விண்ணப்பங்கள், அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஆகியவை குறித்த வெள்ளை அறிக்கையையும் தமிழக அரசு வெளியிட வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu is not suit state for start business says ramadoss

Next Story
கலவரத்தில் அமைதிக் காத்த மக்களுக்கு நேரில் நன்றி சொன்ன கலெக்டர் ஷில்பா பிரபாகரன்!கலெக்டர் ஷில்பா பிரபாகரன்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com