பிப்ரவரி மாதம் முதல் பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ள ஜாக்டோ ஜியோ அமைப்பினர், பிப்ரவரி 14-ந் தேதி தாலுக்கா அளவிலும், பிப்ரவரி 25-ந் தேதி மாவட்ட அளவிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களை உள்ளடங்கிய அமைப்பு ஜாக்டோ ஜியோ. சுமார் 60-க்கு மேற்பட்ட சங்கங்களின் நிர்வாகிகள் இந்த அமைப்பில் இணைந்துள்ளனர். இந்த அமைப்பினர் பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும், அரசுத்துறையில் காலியாக உள்ள 4 லட்சத்திற்கு மேலான பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
தற்காலிக அடிப்படையில் பணியாற்றி வரும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, ஜாக்டோ ஜியோ அமைப்பின் உயர்மட்ட குழு உறுப்பினர்கள் ஆலோசனைக்கூட்டம் இன்று சென்னை திருவல்லிக்கேணயில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், பிப்ரவரி மாதம் முதல் பல்வேறு கட்டங்களாக போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
இதில் முதற்கட்டமாக வரும் பிப்ரவரி 14-ந் தேதி தாலுக்கா அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும், பிப்ரவரி 25-ந் தேதி அந்தந்த மாவட்ட அளவில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு கட்ட போராட்டங்களுக்கு பிறகு அரசு தங்களை அழைத்து பேசிவில்லை என்றால், மீண்டும் அடுத்தக்கட்ட போராட்டம் நடத்துவது குறித்து உயர்மட்ட நிர்வாகிகள் மீண்டும் கூடி, முடிவு எடுக்கப்படும் என்று, அறிவித்துள்ளனர். 2026-ம் ஆண்டு தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஜாக்டோ ஜியோ அமைப்பு மீண்டும் போராட்டத்தை கையில் எடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.