மத்திய போதை தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜாபர் சாதிக், தற்போது அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி சிறையில் இருப்பவர் ஜாபர் சாதிக். முன்னாள் தி.மு.க நிர்வாகியான இவர், தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களை தயாரித்து வந்தவர். டெல்லியில், போதை பொருள் கடத்தல் மற்றும் போதை பொருள் கும்பலை வழிநடத்தியது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மேலும் டெல்லியில், போதை பொருள் கடத்தலில் ஈடுபட்ட தமிழகத்தை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், இவர்கள், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, உள்ளிட்ட நாடுகளுக்கு டெல்லியில் இருந்து போதை பொருள் கடத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் மதிப்பு ரூ2000 கோடி என்றும் மதிப்பிடப்பட்டதை தொடர்ந்து ஜாபர் சாதிக் உள்ளிட்ட 5 பேரும் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, என்.சி.பி அதிகாரிகள் கொடுத்த தகவலின் அடிப்படையில், ஜாபர் சாதிக் மீது சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்தது தொடர்பான வழக்கு பதிவு செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக ஜாபர் சாதிக் சொந்தமான, பல இடங்களில் சோதனை நடத்தி பணம் மற்றும் முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர்.
தற்போது டெல்லி திகார் சிறையில் வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் ஜாபர் சாதிக்கை கைது செய்துள்ளனர். இந்த வழக்கு தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“