மதுரை பாலமேடு மற்றும் திருச்சி சூரியூர் பகுதியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக அரசு சார்பில் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழரின் பாரம்பரிய பண்டிகையாக பொங்கல் பண்டிகை தமிழகம் மட்டுமல்லாமல் உலகளவில் தமிழர்கள் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இதில் ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
இதில் மதுரை அலங்காநல்லூர் பாலமேடு உள்ளிட்ட சில பகுதிகளில் உலக புகழ்பெற்றவை. இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஒரு மாத காலமாக ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. அதனைத் தொடர்ந்து மாட்டு பொங்கல் கொண்டாடப்படும் இந்த நாளில் மதுரை பாலமேடு உள்ளிட்ட சில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
மஞ்சள் ஆற்றின் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், பல மாடுபிடி வீரர்கள் பங்கேற்ற நிலையில், காளைகளை அடக்கும்போது எதிர்பாராதவிதமாக அரவிந்த் ராஜ் என்ற மாடுபிடி வீரர் காளை முட்டியதில் படுகாயமடைந்தார். தொடர்ந்து அவரை சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலும் திருச்சி சூரியூர் பகுதியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் பார்வையாளராக வந்த அரவிந்த் என்ற வாலிபர், காளைகள் மைதானத்தில் இருந்து வெளியே ஓடி வரும்போது காளை மார்பில் முடிட்டியதில் மரணமடைந்தார். ஜல்லிக்கட்டு போட்டியில் இரண்டுபேர் ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கும் தமிழக அரசு சார்பில் 3 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கும் தனது ஆழ்நத இரங்கலை தெரிவித்துக்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் குடும்பத்திற்கு இந்நிதியுதவியை அறிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/