தமிழகத்தில் 2 அமைச்சர்களுக்கு எதிரான சொத்துகுவிப்பு வழக்கில் இன்று (ஆக.7) தீர்ப்பு அளிக்கப்பட உள்ளதால் பெரும் பரபரப்பும் எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
தமிழகத்தின் தற்போதைய திமுக ஆட்சியில், அமைச்சர்களாக இருக்கும் தங்கம் தென்னரசு மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர் மூர்த்தி ஆகிய இருவர் மீதான சொத்து குவிப்பு வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், இந்த வழக்கின் விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு வழங்கப்ப உள்ளது. கடந்த 2006-11 திமுக ஆட்சி காலத்தில், பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் தங்கம் தென்னரசு.
இவரது ஆட்சி காலம் முடிந்து அடுத்து அதிமுக ஆட்சி அமைந்தபோது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தங்கம் தென்னரசு, அவரது மனைவி மணிமேகலை ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துரை வழக்கு பதிவு செய்தது. கடந்த 2012-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த வழக்கில், கடந்த 2022-ம் ஆண்டு தீர்ப்பளித்த ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றம், இருவரையும் வழக்கில் இருந்து விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியது.
அதேபோல் 2006-11 திமுக ஆட்சி காலத்தில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த கே.கே.எஸ்.எஸ்.ஆர்,மூர்த்தி, அவரது மனைவி ஆதிலட்சுமி ஆகியோர் மீது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் இருவரையும் வழக்கில் இருந்து விடுவித்தது. இந்த இரு வழக்குகளின் தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவில்லை.
அதே சமயம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, ஆனந்த் வெங்கடேஷ், இந்த வழக்குகளை தாமான முன்வந்து மறு ஆய்வுக்கு எடுத்துக்கொள்வதாக கூறியிருந்தார். இந்த வழக்கு தொடர்பான நடைபெற்ற இறுதி விசாரணையில், தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று பல விவாதங்களை முன்வைத்தது தங்கம் தென்னரசு தரப்பு.
அதேபோல் விசாரணை அதிகரியின் அறிக்கைபடியே தங்களை விடுதலை செய்ததாக கே.கே.எஸ்.எஸ்.ஆர்.மூர்த்தி தரப்பில் வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த வழக்கில் இன்று (ஆகஸ்ட் 7) தீர்ப்பு வழங்க உள்ளார். இதன் காரணமாக தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இநத தீர்ப்பு எப்படி வரப்போகிறது என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“