/indian-express-tamil/media/media_files/2025/06/29/kanjeepuram-2025-06-29-07-39-42.jpg)
காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஏகாம்பரநாதர் கோயிலில் சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயிலின் புனரமைப்பு பணிகளுக்காக பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக அமைக்கப்பட்டிருந்த ஒரு பெரிய உண்டியலில், கடந்த சனிக்கிழமை பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டது.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியள நிலையில், இது குறித்து காவல்துறை விசாரணையில், இது ஏதேனும் ஒரு ரசாயனப் பொருள் மூலம் தூண்டப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஏகாம்பரநாதர் கோயிலில் ரூ33 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளுக்கு நிதி திரட்டும் நோக்கில், கோயிலின் நுழைவாயில் அருகே ஒரு பிரமாண்ட உண்டியல் வைக்கப்பட்டிருந்தது.
சனிக்கிழமை பிற்பகல், இந்த உண்டியலில் இருந்து புகை வந்ததைக் கண்ட பக்தர்கள் மற்றும் கோயில் ஊழியர்கள் உடனடியாக கோயில் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். சிலர் விரைந்து செயல்பட்டு, உண்டியலுக்குள் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயற்சித்தனர். இதன் பின்னர் மாலை உண்டியல் திறக்கப்பட்டபோது, சுமார் ரூ2,000 மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் முற்றிலும் எரிந்து சேதமடைந்திருப்பது தெரியவந்தது.
மேலும், தீயை அணைக்க ஊற்றப்பட்ட தண்ணீரால் பல ரூபாய் நோட்டுகள் நனைந்து சேதமடைந்திருந்தன. கோயில் ஊழியர்கள் கவனமாக ஈரமாகிய நோட்டுகளை எடுத்து உலர வைத்தனர். காவல்துறையின் தகவல்படி, உண்டியலில் ரூ1 லட்சம் ரொக்கம், நாணயங்கள், சிறிய தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் இருந்தன.
இது குறித்து, கோயில் நிர்வாகம் அளித்த புகாரின் பேரில், சிவகாஞ்சி காவல் நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், குற்றவாளிகளை அடையாளம் காண அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். இது தொடர்பாக வட்டார தகவல்களின்படி, எளிதில் தீப்பற்றக்கூடிய பாஸ்பரஸ் போன்ற ரசாயனப் பொருளை யாராவது ரகசியமாக உண்டியலில் வைத்திருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கிறது.
இந்தச் சம்பவத்தின் பின்னணியில் உள்ள குற்றவாளிகள் மற்றும் அவர்களின் நோக்கம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த உண்டியல் நான்கு மாதங்களுக்கு முன்புதான் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.