சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக கரூரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
விக்கரவாண்டி இடைத்தேர்தலின்போது, நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன், முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறு கருத்துக்களை கூறி ஒரு பாடலையும் பாடியிருந்தார். இது குறித்து திருச்சியில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், கடந்த ஆகஸ்ட் 4-ந் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், சாட்டை துரைமுருகன் பாடிய அதே பாடலை பாடியிருந்தார்.
மேலும் இந்த மேடையில், கருணாநிதி குறித்து சில கருத்துக்களையும் கூறியிருந்தார். சாட்டை துரைமுருகன் பாடிய அதே பாடலை நானும் பாடுகிறேன். காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்கிறது என்று பார்க்கிறேன் என்று சீமான் பேசியிருந்த நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி, கரூரை சேர்ந்த வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன், கடந்த ஆகஸ்ட் 5-ந் தேதி, மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
தொடர்ந்து ஆகஸ்ட் 14-ந் தேதி கரூர் தாந்தோணிமலை காவல்நிலைய எஸ்.பிக்கும் புகார் மனு அளித்திருந்தார். இந்த புகார்களின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், கரூர் குற்றவியல் நீதிம்னறத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு கடந்த அக்டோபர் 14-ந் தேதி விசாரணைக்கு வந்தபோது, தாந்தோணிமலை காவல்நிலையம் இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனைத்தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அவதூறாக பேசுதல், இழிவுபடுத்தும் நோக்கில் பேசி இணையத்தில் வெளியிடுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நேற்று (நவம்பர் 7)வழக்கு பதிவு செய்து செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கில் சீமானுக்கு அபராதத்துடன் 2 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கவும் வாய்ப்புள்ளதாக வழக்கறிஞர் தரப்பில் கூறப்பட்டு வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“