Advertisment

குமரியும் திருவள்ளுவரும்

கலைஞரின் மகன் ஸ்டாலின் ஆட்சியில் உரிய காலத்திலே ரசாயன கலவை பூச்சுப்பணி சம்பந்தமான ஒப்பந்தம் கோரப்பட்டு பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
குமரியும் திருவள்ளுவரும்

த.இ.தாகூர்

Advertisment

இன்றுபோல் இருக்கின்றது ஆனால் ஆண்டுகள் 22 உருண்டோடிவிட்டது!

புத்தாயிரம் ஆண்டான 2000-ல் கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் கடற்பாறையில் வான்மேகங்கள் தொட்டு செல்லும் கம்பீர திருவள்ளுவர் சிலையை அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி திறந்து வைத்தார். குமரியே 3 நாட்கள் விழாக்கோலம் பூண்டு இருந்தது. அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பட கலைஞர்கள், தமிழறிஞர்கள், கவிஞர்கள் என உரையாளர்கள், பலநூறு ஆற்றலாளர்கள் ஒரே பந்தலின் நிழலில் கூடி வான்புகழ் வள்ளுவரின் புகழ் பாடியது இந்த நூற்றாண்டின் புதிய திருப்புமுனையே.

திருவள்ளுவர் சிலையை உருவாக்கிய சிற்பி கணபதி கூடியிருந்த கூட்டத்தின் முன் வைத்த கோரிக்கை. ஐயன் வள்ளுவருக்கு நாம் சிலை அமைத்துள்ளது நிலபரப்பில் அல்ல. கடல் நடுவே உள்ள பாறையில் உருவாக்கியுள்ளோம். கற்சிலை என்றாலுமே கடல் காற்றில் கலந்து வரும் உப்பின்தன்மை சிலையின் பாறை அடுக்குகளிடையே புகுந்து அப்படியே தங்கிவிடும். சிலையை தொட்டுச் செல்வது தென்றல் தான் என்றாலும் பனிப்போன்ற ஒரு போர்வையை சிலையின் சமபரப்பு பகுதிகளில் உப்புத்தன்மை படிந்துவிடும்.

இத்தகைய இயற்கையின் பாதிப்பிலிருந்து நம் ஐயனின் சிலையை பாதுகாக்க 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை சிலிக்கான் என்னும் ரசாயன கலவையை சிலைக்கு பூச வேண்டும். ஐயனுக்கு சிலையமைத்த நம் கலைஞரின் அரசு கவனம் செலுத்தும். என்னுடைய கவலை தமிழகத்தில் எதிர்காலத்தில் மாற்று கட்சி ஆட்சி அமைந்தாலும் திருவள்ளுவரின் சிலை தமிழர்களின் உரிமை சொத்து என்ற சிந்தனையுடன் சிலையை பராமரிக்கும் தன்மையில் அந்த அரசு கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையின் கணபதி ஷபதி அவரது பேச்சை நிறைவு செய்தார்.

காலம் ஓடியது கலைஞரின் ஆட்சிப்போய் ஜெயலலிதாவின் ஆட்சி வந்த காலக்கட்டம் என்பது திருவள்ளுவர் சிலைக்கு ரசாயன கலவை பூசப்பட வேண்டிய நேரத்தில் அன்றைய முதல்வர் குமரி கடற்பாறையில் திருவள்ளுவர் சிலை இருப்பதையே நினைவில் கொள்ளாதவராக இருந்தார்!? குமரியை சேர்ந்த பல தமிழ் அமைப்புகள், தமிழ் ஆர்வலர்கள் ரசாயன பூச்சு பற்றி அரசுக்கு கோரிக்கை வைத்தனர். எதுவும் கேட்காத காதாக மாநில அரசு இருந்ததால் போராட்டத்திற்கு தேதி குறித்து அறிவிப்பு வெளியிட்டனர். கடைசியில் கலைஞரே குமரியில் போராட்டம் நடத்தப் போகும் தினத்தை அறிவித்தப் பின்தான் அரசு ரசாயன கலவை பணிக்கான ஒப்பந்தத்தை கோரியது.

எடப்பாடி தலைமையில் ஆட்சி நடந்தபோது 4 ஆண்டுகள் கடந்தாலும் காலதாமதம் செய்யாது விரைந்து ரசாயன பூச்சு பணியை தொடங்கியதால் தமிழ் ஆர்வலர்கள் அவர்களது மகிழ்ச்சியையும் நன்றியையும் பொதுவழியில் தெரிவித்தனர். கலைஞரின் மகன் ஸ்டாலின் ஆட்சியில் உரிய காலத்திலே ரசாயன கலவை பூச்சுப்பணி சம்பந்தமான ஒப்பந்தம் கோரப்பட்டு பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அண்மையில் பணிகளை ஆய்வு செய்ய வந்த தமிழக சுற்றுலாத்துறை மேலாளர் பாரதிதேவி இ.ஆ.ப, பொறியாளர்கள், தொல்லியல் துறையினர் சிலையில் நடைபெறும் ரசாயன கலவை பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்டனர். பணிகள் விரைவில் முடிவடைந்து உலக சுற்றுலா பணிகள் முதல் உள்ளுர் மக்கள் வரை வள்ளுவர் சிலை பாதத்தை தொட்டு வணங்கி பார்வையிடலாம் என தெரிவித்தார்.

திருவள்ளுவர் சிலை பாறையில் பணிகள் நடைபெறுவதால் துறைசார் அதிகாரிகள், பணியாளர்கள் தவிர எவரையும் தமிழகஅரசு அனுமதிக்காத நிலையில் செப்டம்பர் திங்கள் 7- ம் நாள் இந்திய ஒற்றுமை பயணத்தை கன்னியாகுமரியில் தொடங்கும் முன் ராகுல்காந்தி மற்றும் கட்சி பொறுப்பாளர் பலரும் திருவள்ளுவர் சிலை பாறைக்கு சென்று ஐயனை வணங்கிய பின்பே கன்னியாகுமரி- காஷ்மீர் ஒற்றுமை பயணத்தை தொடங்கியது தமிழர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் ஆண்டு முழுவதும் படகை இயக்கும் போது திருவள்ளுவர் சிலை பாறைக்கு ஆண்டில் 4 மாதங்கள் படகு இயக்கம் நடைபெற்றால் அதுவே ஒரு உலக அதிசயம் போல் பார்க்கப்பட்ட சூழலில் அதற்கான காரணங்களை கேட்பவர்கள் ஏற்றுக்கொள்ள முடியாத விந்தையாக இருப்பதாக உணர்ந்தனர்.

அமைச்சர் ஏ.வ.வேலு அண்மையில் திருவள்ளுவர் ரசாயன பூச்சுக்கால பணிகளை பார்வையிட்டார். திருவள்ளுவர் சிலை பார்வைக்கு படகு போக்குவரத்துக்கு ஏற்படும் தடையால் சுற்றுலாப்பயணிகளுக்கு ஏற்பட்ட ஏமாற்றம் இனியும் தொடரகூடாது என்ற எண்ணத்தில் திருவள்ளுவர் சிலை பாறை விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு இடையே உள்ள கடற்பரப்பில் பாலம் கட்ட தமிழக அரசு விரைவில் நிதி ஒதுக்கீடு செய்யும் என தெரிவித்தார்.

புத்தாயிரம் ஆண்டில் திறந்த திருவள்ளுவர் சிலை திறப்பு விழா ஆண்டை இதுவரை குமரி மாவட்டத்தை சார்ந்த பல்வேறு தமிழ் அமைப்புகள் முனைவர் பத்மநாபன் தலைமையில் இதுவரை தடையின்றி நடத்தி வரும் நிலையில் எதிர்வரும் ஜனவரி 1-ம் நாள் திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவை தமிழக அரசே அரசுவிழாவாக கொண்டாட வேண்டும் என்பதே தமிழ் ஆர்வலர்களின் கோரிக்கையாகவும் எதிர்பார்ப்பாகவும் உள்ளது

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment