திராவிட முன்னேற்றக் கழகத்தின் 15 ஆவது அமைப்பு தேர்தலில் கட்சி தலைவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2வது முறையாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தி.மு.க பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
இதனையடுத்து, தி.மு.க தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இதையும் படியுங்கள்: தி.மு.க இனி தமிழகத்தை நிரந்தரமாக ஆளப் போகிறது: பொதுக் குழுவில் ஸ்டாலின் உரை
ராமதாஸ், நிறுவனர், பா.ம.க: தி.மு.க.,வின் தலைவராக மீண்டும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலினுக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகள். தந்தையைப் போல கட்சியை சிறப்பாக வழி நடத்திச் செல்லவும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
வைகோ, பொதுச் செயலாளர் ம.தி.மு.க: ஜனநாயக முறைப்படி இந்தியாவில் உள்ள மற்ற எல்லா அரசியல் கட்சிகளும் முன்மாதிரியாக, இலக்கணமாக திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தலைமையேற்று நடத்தும் முதலமைச்சர், சகோதரர் மு.க.ஸ்டாலின், மீண்டும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். அவர் ‘மென்மேலும் வெற்றிபெற இதயபூர்வமாக வாழ்த்துகிறேன். மேலும் பல்லாண்டு காலம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக வழிநடத்திச் செல்ல வேண்டி விழைகிறேன்.
திருமாவளவன், தலைவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி: தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி இந்திய நாட்டுக்கே கருத்தியல் அடிப்படையிலான பேரிடர் சூழ்ந்துள்ள நிலையில், தி.மு.க தலைமை ஏற்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தேசிய அளவில் 'சமூகப் பொறுப்பு' உருவாகியுள்ளது. குறிப்பாக, சனாதன சங்பரிவார்களின் 'சமூகப் பிரிவினைவாதப்' போக்குகளை முறியடிக்க வேண்டிய கடமை உள்ளது. அதாவது இந்திய அளவில் சனநாயக சக்திகளை ஐக்கியப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. எனவே தேசிய அளவில் செயல்திட்டங்களை வரையறுத்து இயங்கிட வேண்டுமெனவும் அரசமைப்புச்சட்டம் மற்றும் சனநாயகத்தைப் பாதுகாத்திட அவர் முன்வர வேண்டுமெனவும் வாழ்த்துகிறேன்.
கே.எஸ்.அழகிரி, தலைவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி: திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக இரண்டாம் முறை திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை பொதுக்குழு மூலமாக தேர்வு செய்யப்பட்டிருப்பதை அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக தி.மு.க.வின் தலைமைப் பொறுப்பேற்றிருக்கும் அவரை மனதார வாழ்த்துகிறேன். திராவிட முன்னேற்றக் கழகத் தலைவராக மீண்டும் பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி: திமுக தலைவராக 2வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு சிபிஐ(எம்) சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இரா.முத்தரசன், மாநிலச் செயலாளர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி: திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் இரண்டாம் முறையாக, ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டிருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. நாடு எதிர்நோக்கும் தலைவராக உயர்ந்துள்ள மு.க.ஸ்டாலின், வகுப்புவாத, மதவெறி, சாதிவெறி,. சனாதன பழைமைவாத சக்திகளிடமிருந்தும், பன்னாட்டு கார்ப்ரேட் சக்திகளின் நிதிமூலதன ஆக்டோபஸ் கரங்களிலிருந்தும் இந்திய ஒன்றியத்தை மீட்டு பாதுகாக்க, மதச் சார்பற்ற, சமூகநீதி சார்ந்த ஜனநாயக கட்சி அமைப்பு, வெற்றி காண விழைந்து, இரண்டாம் முறையாக தி.மு.க தலைவராக பொறுப்பேற்கும் மு.க.ஸ்டாலினுக்கு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.
அன்புமணி ராமதாஸ், தலைவர் பா.ம.க: தி.மு.க.,வின் தலைவராக இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு ஆகியோருக்கு வாழ்த்துரை வழங்கினார். அவர்கள் பணி சிறக்கட்டும்.
கமல்ஹாசன், தலைவர், மக்கள் நீதி மய்யம்: இரண்டாவது முறையாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகப் பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்டுள்ள அருமை நண்பர் மு.க.ஸ்டாலினுக்கு எனது வாழ்த்துக்கள். பணி சிறக்கட்டும்.
வேல்முருகன் தலைவர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி: காவி கும்பல்கள், நாட்டையே தன் கட்டுக்குள் வைக்க முயன்று வரும் சூழலில், வட ஆரிய சக்திகளின் ஆதிக்கத்திற்கு, தமிழ் மண்ணில் இடம் இல்லை என்ற முழக்கம், தனது திராவிட, சமூக நீதியின் கோட்பாடுகளால் விண் அதிர வைத்த பெருமை முதல்வரை சாரும். இதுபோன்ற நிலையில், தி.மு.க தலைவராக 2வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள மு.க.ஸ்டாலினுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் மனமார்ந்த பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.