தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்றும், நாளையும் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
தமிழகத்தில் கடந்த 4 மாதங்களாக கடுமையான வெப்பம் பதிவாகி வருகிறது. சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் பகல் நேரங்களில் வீடுகளுக்குள் முடங்கினர். சென்னை, வேலூர், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவானது.
இந்தநிலையில் கடந்த 10 நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதனால் சற்று வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுகிறது. தொடர்ந்து இன்றும், நாளையும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், நாகை, அரியலூர், திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் இன்று (ஜுன் 18) கனமழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தின் அநேக இடங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
நாளை வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்யும் என்று கூறியுள்ளது. வருகிற 21-ம் தேதி வரை தென்தமிழக கடலோரப் பகுதிகள், தென்கிழக்கு வங்கக் கடல், மன்னார் வளைகுடா, குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“